44 குளங்கள்... 923 ஆக்கிரமிப்புகள்... மக்களின் கனவை நிறைவேற்றிய உயர் நீதிமன்றம்

இந்தியளவில் புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலமாக கும்பகோணம் திகழ்கிறது. இங்குள்ள கோயில்களுடன் தொடர்புடைய மிகவும் பழைமையான 44 குளங்கள் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளில் சிக்கியுள்ளன. இவை மீட்கப்பட்டு புத்துயிர் பெற வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கனவு. இதை நிறைவேற்றும் விதமாகச் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

கும்பகோணத்தில் உள்ள 44 குளங்கள் மற்றும் இவற்றோடு தொடர்புடைய 11 வாய்க்கால்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி சோலைமலையை ஆணையராக நியமித்து, நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து நீதிபதி சோலைமலை கும்பகோணத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தார். 44 குளங்களிலும் இவற்றுடன் தொடர்புடைய 11 வாய்க்கால்களிலும் 923 ஆக்கிரமிப்புகள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ‘ஓராண்டுக்குள் 923 ஆக்கிரமிப்புகளையும் மாவட்ட நிர்வாகம் அகற்ற வேண்டும்’ என உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. 44 குளங்களும் மீட்கப்பட வேண்டும் என்பது கும்பகோணம் மக்களின் பெரும் கனவு. இதனால் கும்பகோணம் மேலும் பொலிவு பெறுவதோடு, நிலத்தடிநீர் மட்டமும் உயர்ந்து தண்ணீர் பஞ்சம் நீங்கும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!