வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (10/04/2018)

கடைசி தொடர்பு:17:13 (10/04/2018)

ஆவின் வைத்தியநாதன் விடுதலை! கொந்தளிக்கும் பால் முகவர்கள் சங்கம்

ஆவின் பால்

`ஆவின் பால் கலப்பட வழக்கில் கலப்படம் நடந்ததற்கான போதிய ஆதாரங்களைக் காவல்துறையினர் சரியாகத் தாக்கல் செய்யாததால் வழக்கை தொடர்ந்து நடத்துவது என்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயலாகும்' எனத் தெரிவித்து வழக்கிலிருந்து ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், "ஆவின் பால் கலப்பட வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்" என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில், "எங்கே ஆவின் கலப்பட வழக்கில் ஒப்பந்ததாரர் வைத்தியநாதன்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுவிட்டால், கலப்படம் நடந்த காலகட்டத்தில் ஆவின் பால் பண்ணைகளிலும் ஆவின் நிறுவனத்திலும் பணியில் இருந்த அதிகாரிகளும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டுவிடும். அப்போது, அவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுவிடும் என்பதால் தவறிழைத்தவர்கள் மீதான உரிய ஆதாரங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய காவல்துறை தவறிவிட்டது என்றே கருதுகிறோம்.

இவ்வழக்கில் ஆவின் அதிகாரிகளைக் காப்பாற்ற நீதி சாகடிக்கப்பட்டு, உண்மை குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது என்பது படிக்காத பாமரனுக்கும் நன்றாகத் தெரியும். எனவே, தமிழக அரசு இவ்வழக்கில் மேல் முறையீடு செய்து ஆவின் கலப்பட வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்துவதோடு, ஆவின் கலப்பட விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய தண்டனை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் எனத் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.