வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (10/04/2018)

கடைசி தொடர்பு:17:05 (10/04/2018)

`இழப்பீடு வழங்குங்கள்' - சிமென்ட் ஆலைக்கு எதிராக 10 கிராம மக்கள் போராட்டம்

அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்க வலியுறுத்தி 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில் அரசு சிமென்ட் ஆலை தொடங்கியபோது நெறிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், காட்டுபிரிங்கியம், கல்லங்குறிச்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களுக்காக விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 25,000 இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது. குறைவான தொகை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி விவசாயிகள் அரியலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஏக்கர் ஒன்றுக்கு 1,25,000 வழங்க அரசு சிமென்ட்ஆலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை இதுவரை அரசு சிமென்ட் ஆலை வழங்கவில்லை. இதனை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகில் அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். நிலம் கையகப்படுத்தப்பட்டபோது அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம் கூறியவாறு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.