'செல்போன்களைப் பயன்படுத்தலாம்...! - ஐ.பி.எல் ரசிகர்களுக்கு 'திடீர்' சலுகை

இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டிகளைக் காணச் செல்லும் ரசிகர்கள் செல்ஃபோன்களை எடுத்துச் செல்லலாம் என சி.எஸ்.கே அணி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சிஎஸ்கே

தமிழகத்தில் காவிரி விவகாரம் தொடர்பாகப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருவதால் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது எனப் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற உள்ளது. பல எதிர்ப்புகளை மீறி இன்றைய போட்டி நடக்க உள்ளது. இதனால், மைதானம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடந்தால் மைதானத்தை முற்றுகையிடுவோம் மற்றும் மைதானத்துக்குள் போராட்டம் செய்வோம் எனப் பல தரப்பினர் கூறியிருந்தனர். இதனால் மைதானத்துக்கு வரும் ரசிகர்களுக்கு நேற்று தமிழக கிரிக்கெட் சங்கம் பலத்த கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் கொடிகள், பதாகைகள், செல்ஃபோன்கள், ரோடியோ, இசைக் கருவிகள், கார் சாவி, பட்டாசு, தீப்பெட்டிகள், கத்தி போன்ற பொருள்கள், உணவுப் பொருள்கள் ஆகியவை கொண்டு செல்லக் கூடாது என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினால் போட்டியைக் காணச் செல்லும் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர். 

இந்நிலையில் தற்போது போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள் செல்ஃபோன்களை கொண்டு வரலாம் என சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலர் வரவேற்பளித்துள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!