வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (10/04/2018)

கடைசி தொடர்பு:17:40 (10/04/2018)

டிரைவர் கண்ணசந்த அந்த நேரம்! கரூரில் கேரளா சுற்றுலாப் பயணிகளுக்கு நடந்த சோகம்

கேரளாவைச் சேர்ந்தவர்கள் இனோவா காரில் சுற்றுலா வந்தபோது கரூர் மாவட்டத்தில் டிரைவர் கண் அசர, எதிர்சாலையில் பாய்ந்த கார் கடும் விபத்துக்குள்ளானது. இதில் முகமது என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மற்றவர்கள் அனைவரும் படுகாயமடைந்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இனோவா காரில் சுற்றுலா வந்துள்ளதாகத் தெரிகிறது. அந்தக் காரில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் பயணித்துள்ளனர். நேற்றிரவு 11 மணியளவில் ஏர்வாடியிலிருந்து புறப்பட்ட இவர்களது கார், கரூர் ஆண்டிபட்டிகோட்டை அருகே வந்திருக்கிறது. அப்போது, டிரைவர் சற்று கண் அசர, கட்டுப்பாட்டை இழந்த இனோவா கார் எதிர் சாலையில் பாய்ந்து பல்டி அடித்து கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே முகமது (60) என்பவர் பலியானார். சிலர் படுகாயமடைந்துள்ளனர். இன்னும் சிலர் லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகச் சொல்கிறார்கள். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் கரூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையான என்.ஹெச் 44 சாலையில் பயணித்த, இவர்கள் பெங்களூர் நோக்கி பயணிக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதுபற்றி அந்தப் பகுதி மக்களிடம் பேசினோம். "விபத்து நடந்த இடம் கரூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையில் நடந்திருக்கிறது. இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இரண்டு மாவட்ட நிர்வாகங்களிடமும் பல தடவை கோரிக்கை வச்சுட்டோம். ஒண்ணும் நடக்கலை. அதேபோல், தேசிய நெடுஞ்சாலை என்பதால் பல வாகன ஓட்டிகளும் அதிக ஸ்பீடில் வருவதாலும், இரவிலும் நிற்காமல் வண்டிகளை இயக்கி, சற்று கண் அயரும் நேரத்திலும் இதுபோல விபத்துகள் அடிக்கடி நடந்துவிடுகின்றன. வாகன ஓட்டிகள் விழிப்பு உணர்வுடன் வாகனங்களை இயக்க வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற கடுமையான விபத்துகள் நடக்காமல் தடுக்கப்படும்" என்றார்கள்.