வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (10/04/2018)

கடைசி தொடர்பு:15:56 (10/04/2018)

ஐ.பி.எல் பார்க்க இத்தனை நிபந்தனைகள் விதித்திருப்பதே தமிழர்களின் முதல் வெற்றி - அமீர்

விவசாயிகளுக்காகத் தமிழர்களுக்காகப் போராடுவோம். எவ்வளவு போலீஸார் இருந்தாலும் அஞ்சமாட்டோம். கைதானாலும் பரவாயில்லை, தொடர்ந்து போராடுவோம்." என்று பாரதிராஜா கூறியுள்ளார்

ஐ.பி.எல் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்று நேற்று பாரதிராஜா தலைமையில் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அந்த அமைப்பு தமிழர்களின் நலனுக்காகவும் தமிழர்களின் உரிமையைக் காக்கவும் செயல்படும் என்றனர். மேலும், இந்த அமைப்பின் சார்பில் ஐ.பி.எல் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும், போட்டியைக் காண யாரும் போகக் கூடாது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தனர். ``கட்சி, சாதி, மதம் என அனைத்தையும் புறம்தள்ளி வைத்துவிட்டு வாருங்கள். தமிழர்களுக்காக ஒன்றாகச் சேர்ந்து குரல் கொடுப்போம்" என பாரதிராஜா கூறியிருந்தார். 

அமீர்

இந்நிலையில், தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக இயக்குநர் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், தங்கர்பச்சான் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அவர்களுடன் மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சித் தலைவர் மணியரசன் ஆகியோரும் உடனிருந்தனர். ``ஐ.பி.எல் போட்டியை சென்னையில் நடத்தக் கூடாது என முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், போட்டி நடத்துகிறார்கள். அதற்கு தார்மிக ரீதியில் எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். கட்சிகளுக்கு அப்பார்பட்டு அன்சாரி, தனியரசு, மணியரசன் ஆகியோர் எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். சீமானும் அன்புமனியும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். அண்ணா சிலை முன்பு ஒன்றிணைவோம். பிறகு, என்ன நடக்கிறது எனப் பொறுத்திருந்து பாருங்கள். விவசாயிகளுக்காக தமிழர்களுக்காக போராடுவோம். எவ்வளவு போலீஸார் இருந்தாலும் அஞ்சமாட்டோம். கைதானாலும் பரவாயில்லை, தொடர்ந்து போராடுவோம்' என்றார் பாரதிராஜா. 

ஐபிஎல் -  தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை

``ஜெயலலிதா இருக்கும்போது, ஒரு முறை போட்டியை வேறு இடத்துக்கு மாற்றி வைத்திருக்கிறார்கள். காவல்துறை சட்ட ஒழுங்கு சரியானபடி இல்லை எனச் சொல்லியிருக்கிறது. ஐ.பி.எல் நிறுவனமும் வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கலாமா ? என்று கேட்டுள்ளது. ஆனால், அவ்வாறு செய்தால் கையாலாகத அரசு எனச் சொல்லிவிடுவார்களோ என பயந்து இடத்தை மாற்ற வேண்டாம். என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு கூறியிருக்கிறது' என்று இயக்குநர் கெளதமன் கூறியவுடன் பேச ஆரம்பித்த அமீர், "கறுப்புச் சட்டை அணியக் கூடாது, பேனா, பதாகைகள் எடுத்துச்செல்லக் கூடாது, தண்ணீர் கூட எடுத்துச் செல்லக் கூடாது, முழக்கமிடக் கூடாது என இத்தனை நிபந்தனைகளுக்குட்பட்டு அப்படி அந்தப் போட்டியைக் காண வேண்டுமா? அப்படி உள்ளே போய் ஃபோர், சிக்ஸ் போனால் வாயை மூடிகிட்டு உட்கார வேண்டுமா? ஒரு வகையில், இத்தனை நிபந்தனைகள் விதித்திருப்பதே தமிழர்களின் முதல் வெற்றியாகத்தான் பார்க்க வேண்டும்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க