சென்னை ராணுவக் கண்காட்சிக்கு வந்த ரஷ்ய வீரர் கடலில் மூழ்கி பலி!

சென்னையை அடுத்துள்ள திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் ஏப்ரல் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள வந்த ரஷ்ய வீரர் கடலில் மூழ்கி இறந்துவிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தைப் பகுதியில் நாளை (11.4.2018) முதல் 14-ம் தேதி வரை ராணுவக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல், கொரியா, ஸ்வீடன் உள்ளிட்ட 47 நாடுகள் இதில் கலந்துகொள்வதாக அறிவித்திருக்கின்றன. இந்தியாவை உலகின் முக்கிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக காட்சிப்படுத்துவதே பாதுகாப்புக் கண்காட்சியின் நோக்கமாகும். இந்தக் கண்காட்சியில் உள்நாட்டு தொழிற்சாலைகள் தங்களது உள்நாட்டு உற்பத்தி தடவாளங்களை, பகுதிப் பொருள்களையும் காட்சிக்கு வைக்க உள்ளன. இதற்காகக் கிழக்கு கடற்கரை சாலையில் 400 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு 463 கோடி ரூபாய் செலவில் இரவும் பகலுமாக வேலைசெய்து வருகிறார்கள்.

இதில் கலந்துகொள்ள வந்த ரஷ்ய வீரர் இகோர் (55) என்பவர் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் நண்பர்கள் கார்டியானா (44), இரினா (43) ஆகிய இருவருடன் வந்தார். மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்கி இருந்தனர். இன்று காலை இகோர் நட்சத்திர விடுதியின் பின்புறம் உள்ள கடலில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி மயங்கினார். அவரை ஹோட்டல் ஊழியர்கள், மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இறந்த இகோர் ரஷ்ய ராணுவத்தில் ராணுவ தளவாள பொருள்கள் விநியோகிக்கும் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இகோரின் உடல் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லும் பணியில் வருவாய்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!