சிறுவனின் உயிரைப் பறித்த செல்போன் - வாடகை கொடுக்க நடந்த கொடூரம்

கொலை

வாடகைப் பணம் கொடுக்க சிறுவனிடமிருந்து செல்போனை வாலிபர் ஒருவர் பறித்துள்ளார். பிறகு, தன்னைக் காட்டிக் கொடுத்துவிடாமலிருக்க அவரைக் கிணற்றில் தள்ளிக் கொன்றுள்ளார். 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அழகாபுரி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சங்கர். கூலித்தொழிலாளி. இவரின் மனைவி வினோதினி. இவர்களுக்கு கிஷோர்குமார் என்ற எட்டு வயது மகன் உள்ளார். இவர், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 5-ம் தேதி பள்ளிக்குச் சென்ற கிஷோர்குமார், வீட்டுக்கு வந்தார். புத்தகப் பையை வீட்டில் வைத்து விட்டு வெளியில் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது அதன்பேரில் போலீஸார் கிஷோர்குமாரைத் தேடிவந்தனர். மகனைக் காணவில்லை என்று சங்கர், பல இடங்களில் நோட்டீஸ் ஒட்டினார். இந்தநிலையில் பெங்களூர்-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிணற்றிலிருந்து தூர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததும் அங்கு  சென்றனர். அப்போது, கிணற்றில் சிறுவன் கிஷோர்குமாரின் உடல் கிடந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மூலம் உடல் மீட்கப்பட்டது.  கிஷோர்குமாரின் உடலைப்பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்
 தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று கிஷோர்குமார் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், செல்போனை கேட்டுள்ளார். ஆனால், கிஷோர்குமார் கொடுக்கவில்லை. இதனால், செல்போனை அவரிடமிருந்து பிடுங்கியுள்ளார். பிறகு,  அருகில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டார். பிறகு அந்த செல்போனை ஒருவரிடம் கொடுத்து இரண்டாயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தை வீட்டு வாடகைக்குக் கொடுத்துள்ளார்" என்றனர். 

இந்த கொலைச் சம்பவம் செல்போன் மூலமாகத்தான் துப்பறியப்பட்டுள்ளது. தொடர்ந்து செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.. கைது செய்யப்பட்ட விக்னேஷ், கட்டட மேஸ்திரியாக உள்ளார். கணவனும் மனைவியும் வாடகை வீட்டில் குடியிருக்கின்றனர். சரிவர வேலையில்லாததால் வறுமையில் விக்னேஷ் வாடியுள்ளார். அப்போதுதான் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

 வீட்டு வாடகைக்குப் பணம் கொடுக்க சிறுவனைக் கொலைச் செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!