சேப்பாக்கம் ஸ்டேடியத்தை நோக்கிப் பாய்ந்த விடுதலைச் சிறுத்தைகள்! | Viduthalai siruthaigal party cadres protest outside MA Chidambaram Stadium

வெளியிடப்பட்ட நேரம்: 16:59 (10/04/2018)

கடைசி தொடர்பு:16:59 (10/04/2018)

சேப்பாக்கம் ஸ்டேடியத்தை நோக்கிப் பாய்ந்த விடுதலைச் சிறுத்தைகள்!

இன்று சென்னையில் நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிகளை நிறுத்த வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தினர்.

விசிக

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என அரசியல் கட்சியினரும், பிரபலங்கள் மேலும் பல அமைப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டிகளை நிறுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு வாரகாலமாக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக இன்று காலை முதல் மைதானத்தை சுற்றி ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பல விதங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐ.பி.எல் போட்டிக்கு வலுத்து வரும் எதிர்ப்பால் சேப்பாக்கம் மைதானத்துக்கும், வீரர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காலை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மைதானத்துக்குள் போட்டிகளை காணச் செல்லும் ரசிகர்களுக்கும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி தொடங்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. சிறிது நேரத்தில் மைதானத்தை நோக்கி ரசிகர்கள் படையெடுக்க தொடங்கிவிடுவார்கள். இந்தச் சூழ்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போட்டி நடக்கும் மைதானத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்திய போலீஸார் இந்தப் பகுதியில் செல்லக் கூடாது, போராட்டம் நடத்தக் கூடாது எனத் தெரிவித்தனர். ஆனால், அதை ஏற்காத வி.சி.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அடுத்த சிறிது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

போட்டிகள் தொடங்கும் முன் வீரர்கள் ஆடுகளத்தில் பயிற்சி செய்வதற்காக சேப்பாக்கம் மைதானத்துக்குள் செல்ல உள்ள இந்த நேரத்தில் விசிக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


[X] Close

[X] Close