ஜெயலலிதா... பிடல் காஸ்ட்ரோ... செடிகளுக்கு பெயர் வைத்து அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

 

மரத்துக்கு ஜெயலலிதா பெயர் வைத்த மாணவர்கள்

தலைவர்கள் மறைவின்போது, `அச்சச்சோ' என்று உச் கொட்டுவதோடு அவர்களை மறந்துபோகிறோம். அவர்களின் நினைவுநாள்கள்கூட நமக்கு தெரிவதில்லை. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளி மாணவர்கள் வைத்து அந்தப் பள்ளி வளாகம் மட்டுமின்றி அந்தக் கிராமம் முழுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வருகிறது. யார், செடியும் அதைப் பாதுகாக்கும் கம்பிக் கூண்டும் தருகிறார்களோ அவர்கள் விரும்பும் பெயரை அந்தச் செடிகளுக்கு வைக்கிறார்கள். அதைவிட, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரிலும் மறைந்த முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பெயரிலும் செடிகள் நட்டு, 'அட' என்று நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்தான் இந்தச் `செடி வை... கூடவே பேரும் வை' அசத்தல் மேளா நடக்கிறது. பள்ளிக்கு முன்னே பலா, வேம்பு, பூவரசம் மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. அதில் ஒரு பலா மரத்தில் `எங்கள் செல்ல மரம் நிமி' என்ற பதாகை வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மரம், செடியிலும் ஒரு பெயர் தாங்கிய அட்டைகள் கண்ணில் தென்படுகின்றன. ஒரு வேப்பங்கன்றில் 'முதல்வர் ஜெயா' என்ற பெயரோடு, 'வாழ வையுங்கள். வாழ வைக்கிறேன்' என்ற வாசகம் தாங்கிய அட்டைக் கட்டிவிடப்பட்டிருக்கிறது. இன்னொரு மூங்கில் செடியில், `மரங்களின் காதலன் பிடல்காஸ்ட்ரோ' என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இதை தவிர, இன்னும் பல செடிகளில் உள்ளூரில் அந்தச் செடிகளை வழங்கியவர்கள் பெயர்கள் அல்லது அவர்கள் வைக்கச் சொன்ன பெயர்களில் பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

அந்தப் பள்ளியின் ஆசிரியர் வெங்கடேசன், "எங்கள் மாணவர்களை இப்படி மரங்களை வளர்ப்பதில் ஆர்வப்படுத்துகிறோம். அதோடு, சும்மா மரக்கன்றுகள் வைத்தால், சீரியஸாக அதை வளர்க்கமாட்டார்கள் என்பதால், மரக்கன்றுகள் வைப்பவர்களின் பெயர்களையும் அந்த மரக்கன்றுகளுக்கு சூட்டுகிறோம். சமீபத்தில்கூட, இந்தப் பள்ளியில் தனது இரண்டு பிள்ளைகளைச் சேர்த்திருக்கும் சுப்ரமணியன், காயத்ரி வைத்த மரக்கன்றுக்கு சுப்பு, காயுன்னு பெயர் வைத்திருக்கிறோம். அவர்களின் பிள்ளைகள் அந்த செடியை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்கள். பள்ளிக்கு முகப்பில் இருக்கும் பலா மரத்துக்கு நிமின்னு பெயர் வைத்திருக்கிறோம். அந்த மரம் எங்கள் எல்லோருக்கும் செல்ல மரம். பிள்ளைகளிடம் படிப்பை வளர்ப்பதைக் காட்டிலும் அவர்களுக்கு இயற்கையை வளர்க்க அதிக ஆர்வம் ஊட்டி வருகிறோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!