வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (10/04/2018)

கடைசி தொடர்பு:17:28 (10/04/2018)

"பி.டி.உஷா மாதிரி இருக்கேன்னு பாராட்டுனாங்க...!" - டீ மாஸ்டர் டு மாரத்தான் கில்லி கலைமணி

கல்லூரியில் படிக்கும் ஒரு மகள் என மூன்று பிள்ளைகளையும் கரை சேர்க்கும் பொறுப்பு ஒருபக்கம்,  கணவரும் தானும் சேர்ந்து நடத்தும் டீக்கடை மறுபக்கம். இவற்றுக்கிடையில்தான் தன்னுடைய கனவுகளைத் துரத்தி  ‘ஓடி’க்கொண்டிருக்கிறார் கலைமணி.

``எக்கோவ்... என்ன விசேஷமுங்க? போட்டோக்காரவங்கெல்லாம் வந்திருக்காங்க?'' என்று நம் புகைப்படக்காரர் போட்டோ எடுப்பதைப் பார்த்து, டீ குடிக்க வந்த ஒருவர்  கிண்டலாய்க் கேட்க...
``உங்களுக்கு சேதி தெரியாதுங்களாண்ணே, கலைமணி நான் படம் நடிக்கப்போறேனுங்க. அதான் விகடன்லேயிருந்து பேட்டி எடுக்க வந்திருக்காங்க'' என்று பெருமிதப் பொய் சொல்லிச் சிரிக்கிறார் கலைமணி.

`இங்க என்ன நடக்குது?' எனச் சிந்தித்தவாறு டீக்கடையை மொய்க்கும்  கூட்டத்தினரிடம், ``ஒண்ணுமில்லைங்க... என் பொண்டாட்டி மாரத்தான்ல கலந்துக்கிட்டா. அதனால, அவளை பேட்டி எடுக்க வந்திருக்காங்க” என்று பூரிப்பும் புன்னகையுமாகச் சொல்லி பரபரக்கிறார் கலைமணியின் கணவர் அழகு!

`ஸ்போர்ட்ஸில் பெரிய ஆளாக வரவேண்டும்’ என்று பள்ளிக்காலத்தில் தனக்குள்ளிருந்த தீராத ஆசையை, தன் 45-வது வயதில் நிறைவேற்றிக்கொண்டுள்ளார் கலைமணி. தோளுக்கு மேல் வளர்ந்த இரண்டு மகன்கள்,  கல்லூரியில் படிக்கும் ஒரு மகள் என மூன்று பிள்ளைகளையும் கரை சேர்க்கும் பொறுப்பு ஒருபக்கம்,  கணவரும் தானும் சேர்ந்து நடத்தும் டீக்கடை மறுபக்கம். இவற்றுக்கிடையில்தான் தன்னுடைய கனவுகளைத் துரத்தி  ‘ஓடி’க்கொண்டிருக்கிறார் கலைமணி.

கோவை செல்வபுரம் அருகில் உள்ள தாமஸ் நகரில் டீக்கடை வைத்திருக்கும் கலைமணி, தொடர் ஓட்டப்பந்தய வீராங்கனை.

"இதுவரை எத்தனை போட்டிகளில் பங்குபெற்றிருப்பீர்கள்?''

"அதெல்லாம் கணக்கு கிடையாதுங்க. சிட்டிக்குள்ள எங்க போட்டி வெச்சாலும் ‘ஓடி’ருவேன். இதோ பாருங்க... இதெல்லாம் நான் வாங்கின மெடல்ஸ்'' என்றபடி பீரோவில் வைத்திருந்த மெடல்களை எடுத்தபோது, அவர் கைகொள்ளவில்லை. அவ்வளவு மெடல்கள்!

"நான் பொறந்தது புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி கிராமம்.  சின்ன வயசுலேயிருந்து எனக்கு ஸ்போர்ட்ஸ்னா உசுரு. ஸ்கூல்ல நடக்கிற விளையாட்டுப் போட்டியா இருந்தாலும் சரி, பொங்கலுக்கு எங்க கிராமத்துல நடக்கிற விளையாட்டுப் போட்டியா இருந்தாலும் சரி, எல்லா போட்டிகள்லயும் என் பேரு இருக்கும்'' கலைமணியின் வார்த்தைகளில் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது.

"ஒவ்வொரு போட்டியிலயும் சொல்லிவெச்சாப்புல நான்தான் முதல் பரிசு வாங்குவேன். வீட்டுல ஆம்பளபுள்ளை இல்லைங்கிறதால எங்க அப்பா என்னை ஆம்பளபுள்ளையாட்டமே வளர்த்தார். எங்க ஊரைச் சுற்றி எந்த ஊர்ல விளையாட்டுப் போட்டி நடந்தாலும் அங்கே நான் முதல் ஆளா நிற்பேன். என் அப்பாவும் பெருமையோடு என்னை அனுப்பிவைப்பார். சோப் டப்பா, டிபன்பாக்ஸ், கண்ணாடினு ஒவ்வொரு வருஷமும் நான் வாங்கிற பரிசுங்க எங்க வீட்டுல குவிஞ்சு கெடக்கும். ஸ்கூல்ல நான் கபடி பிளேயராத்தான் இருந்தேன். `கில்லி' படத்துல விஜய் எப்படியோ அப்படித்தான் எங்க கபடி டீம்ல நான்.  எங்க டீம் பேரு  `டிங்-டாங்'.  நாங்க கலந்துக்கிற போட்டிகள்ல பெரும்பாலும் எங்க டீம்தான் வின் பண்ணும்.

கலைமணி

ஒருமுறை நான் கபடி ஆடுறதைப் பார்த்துட்டு `மன்சூர்’ங்கிற ஒரு சார்... ` ஏம்மா கலை, உனக்கு ரன்னிங் சூப்பரா வரும்மா... நீ அதுல ஃபோகஸ் பண்ணு’னு சொன்னார். கொஞ்ச நாள் கபடியை ஓரங்கட்டிட்டு, ஓட்டத்துல மட்டுமே கவனம் செலுத்தினேன். 100 மீட்டர், 200 மீட்டர், 300 மீட்டர்னு எல்லா ஓட்டத்துலயும் நான் ஃபர்ஸ்ட் வந்தேன். அப்போ நிறைய பேர் என் ஓட்டத்தையும் ஒல்லியான உடம்பையும் பார்த்துட்டு, `பார்க்கிறதுக்கு நீ அப்படியே பி.டி.உஷா மாதிரி இருக்கே’னு சொல்லி பாராட்டுவாங்க. நானும், பெரிய கனவோட இருந்தேன். திடீர்னு எங்க அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டார். அப்போ நான் பத்தாவதுதான் படிச்சுக்கிட்டு இருந்தேன். `எனக்கு கல்யாணமெல்லாம் வேணாம். நான் ஸ்போர்ட்ஸ்ல நிறைய சாதிக்கணும்’னு எவ்வளவோ அடம்பிடிச்சேன். ஆனா,  அப்பாகிட்ட  என் பேச்சு எடுபடவேயில்லை.

எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. என் வீட்டுக்காரர் என்னை பொண்ணு பார்க்க வந்தபோது, அவரை தனியா கூப்பிட்டு `எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை’னு சொன்னேன். `ஏன்?’னு கேட்டார். `நான் ஸ்போர்ட்ஸ்ல சாதிக்கணும்'னு சொன்னேன். `அவ்வளவுதானே... கல்யாணத்துக்குப் பிறகு  தாராளமா பண்ணிக்கோ’னு சொன்னார். அதுக்கும்மேல என்னால பேச முடியலை.  கல்யாணம் முடிஞ்சு கோயம்புத்தூருக்கு வந்தேன்.

கலைமணி

நான், கிராமத்துல வளர்ந்தவ. எனக்கு கோயம்புத்தூர் டவுனைப் பார்த்ததும் தலை சுத்திருச்சு! எல்லா தெருக்களும் ஒரே மாதிரி இருக்கும். நான் வீட்டுக்குள்ளேயேதான் இருப்பேன். இந்தத் தெருவுலே இருந்து அந்தத் தெருவுக்கு எனக்குப் போகத் தெரியாது. ஸ்போர்ட்ஸ்ல கலந்துக்கணும்கிற நினைப்பெல்லாம் போயிருச்சு. அப்படியே காலம் ஓடி, எனக்கும் மூணு பிள்ளைகளாகிருச்சு. என் வீட்டுக்காரருக்கு ஒத்தாசையா நானும் டீக்கடைக்குப் போய் டீ ஆத்த ஆரம்பிச்சேன். எப்போவாவது பழைய நினைப்பு வரும்.  அப்போ என் வீட்டுக்காரர்கிட்ட, `ஸ்போர்ட்ஸ்ல பெரிய ஆளா வரவேண்டியவளைக்  கட்டிக்கிட்டு வந்து, இப்படி டீ ஆத்த வுட்டுட்டியே மாமோவ்’னு விளையாட்டா சொல்வேன். அதுக்கு அவர் பதில் எதுவும் சொல்லாம, சிரிச்சுக்குவார்.

பத்து வருஷங்களுக்கு முன்னாடி ஒருநாள்  ராத்திரி கடையில இருந்து வரும்போது,  ஏதோ ஒரு பேப்பரோட வந்தார். `ஏ... புள்ள நீ `ஓடணும்... ஓடணும்'னு சொல்லிக்கிட்டு இருந்தியே... இந்தா இதப் பாரு! உன்னால ஓட முடிஞ்சா ஓடு'னு சொல்லிக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்தேன். `முதியோர்களுக்கான தடகளப் போட்டி’னு போட்டிருந்துச்சு. எனக்கு பயங்கர சந்தோஷம்.  நான் கொஞ்சம்கூட யோசிக்கலை. `உடனே போறேன்’னு சொல்லிட்டேன். அன்னைக்கு ராத்திரி முழுக்க எனக்கு தூக்கமே வரலை.  விடியற்காத்தால 2:30 மணிக்கே எழுந்திருச்சு, சாப்பாடெல்லாம் செஞ்சுவெச்சுட்டு,  தனி ஆளா பஸ் புடிச்சு 4:30 மணிக்கே கிரவுண்டுக்குப் போயிட்டேன். ஆனா, அந்த நேரத்துக்கு அங்க யாருமே இல்லை.  போட்டி ஆரம்பிக்க 9 மணிக்குமேல ஆச்சு. பிராக்டீஸே இல்லாமல் அதுல நான் ஃபர்ஸ்ட் வந்தேன். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் எங்க வீட்டுல எல்லோரும் செம ஹேப்பி!

அங்கேயும் என் ஓட்டத்தைப் பார்த்துட்டு எல்லாரும் பாராட்டினாங்க. ஜோசப்னு ஒரு கோச் என்னைக் கூப்பிட்டு விசாரிச்சார். நான் விவரத்தைச் சொன்னதும், `நீ தொடர்ந்து போட்டிகள்ல கலந்துக்கோம்மா. டெய்லியும் கிரவுண்டுக்கு வந்திரு'ன்னார். நமக்கு சொல்லவா வேணும். அன்னைக்கு திரும்பவும் ஓட ஆரம்பிச்சதுதான் இன்னமும் ஓடிக்கிட்டே இருக்கேன்'' என்று சொல்லும் கலைமணி, இதுவரை மாவட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் நான்கு தங்கப்பதக்கங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களும் பெற்றுள்ளார்.  மாநில அளவிலான போட்டிகளுக்காக  ராஜஸ்தான், சண்டிகர், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று தோல்வியைத் தழுவியிருக்கிறார். காரணம், அங்கெல்லாம் இவர் ஓடியது ஓப்பன் கேடகரியில். அதாவது 20 வயதுப் பிள்ளைகளோடு இவரும் போட்டியிட்டிருக்கிறார்.

45-வயதுக்கு மேற்பட்டோருக்கான மாரத்தான் போட்டியில் கலந்துகொள்வதற்காக தினம்தோறும் தீவிர பயிற்சியில் இருக்கிறார் கலைமணி. ஏற்கெனவே அன்னூரில் நடந்த மாரத்தானில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கும் கலைமணியின் இப்போதைய டார்கெட், 42 கிலோமிட்டரை 4 மணி நேரத்தில் கடக்க வேண்டும் என்பதுதான். ``இப்போ என் மனசு முழுக்க மாரத்தான்தான் இருக்கு'' என்கிறார் கலைமணி கண்களைச்  சிமிட்டியபடி.

கலைமணி

கலைமணி, அழகு

 


டிரெண்டிங் @ விகடன்