துணைவேந்தர் பங்களா ரெடி! சூரப்பா நாளை மறுநாள் பதவி ஏற்கிறார்! 

'அண்ணா பல்கலைக்கழகத்தை ஊழலற்ற நிர்வாகத்தால் மேம்படுத்துவேன்' என்கிறார் புதிய துணைவேந்தராக பதவி ஏற்கவுள்ள பேராசிரியர் சூரப்பா

கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் சூரப்பா, 12.4.2018 அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பதவி ஏற்கவுள்ளார். இவரின் வருகைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலுவலகம் மற்றும் பங்களா போன்றவை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

துணைவேந்தர் சூரப்பா

கர்நாடகாவைச் சார்ந்த பேராசிரியர் சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். இவரது நியமனத்தைத் தமிழக அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள ஆளுநர் மாளிகை, `துணைவேந்தர் நியமனம் வெளிப்படைத் தன்மையாக நடைபெற்றுள்ளது. இதில் எந்தவிதமான தலையீடும் இல்லை. துணைவேந்தர் நியமனம் விதிகளின்படியே நடைபெற்றுள்ளது. இதை அரசியலாக்க வேண்டாம்' என்று செய்தி வெளியிட்டுள்ளது. 

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சூரப்பா அங்கிருந்து முறைப்படி பணியிலிருந்து விலகி, நாளை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வர இருக்கிறார். இவரது வருகையை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளும் பணியாளர்களும் துணைவேந்தர் அலுவலகத்தையும், துணைவேந்தர் பங்களாவையும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேராசிரியர் சூரப்பா நாளை மறுநாள் (12.4.2018) பதவி ஏற்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

துணைவேந்தர் பதவி ஏற்புக்குப் பின்பு, 'அண்ணா பல்கலைக்கழகத்தை ஊழலற்ற நிர்வாகத்தால் தூய்மைப்படுத்துவேன்' என்று பேராசிரியர் சூரப்பா சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!