வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (10/04/2018)

கடைசி தொடர்பு:07:10 (11/04/2018)

பான் கார்டு படிவத்தில் மூன்றாம் பாலினத்துக்காகத் திருத்தம்: திருநங்கைகள் வரவேற்பு #Transgender

திருநங்கை

நம் சமூகத்தில் எந்தவொரு நடைமுறையும் ஆணுக்கு மற்றும் பெண்ணுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. பேருந்து இருக்கை ஒதுக்கீட்டில்கூட ஆண், பெண் என்று மட்டுமே இருக்கிறது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் தொடங்கி, அரசு மற்றும் தனியார் துறைகள் பலவற்றிலும் ஆண், பெண் ஆகிய இரு பாலினருக்கான இடமே கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையே வருமான வரி தாக்கல் செய்வதற்கு அடிப்படையான பான் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்திலும் இருந்து வந்தது. அதில், திருநங்கைகளுக்கு பயன்தரும் விதத்தில் புதிய திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

தற்போது பான்கார்டு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் தங்களின் பாலினத்தைக் குறிப்பதில் சிக்கல் இருந்தது. ஏனெனில் அவர்களின் பிறப்புச் சான்றிதழில் ஆண் என்றே இருந்து வருகிறது. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பின் பெண்ணாக மாறியிருப்பதால் ஆண் எனக் குறிப்பிடுவதை அவர்கள் ஏற்கவில்லை. இந்தக் குழப்பம் பான்கார்டு பெறுவதில் திருநங்கைகளுக்கு பெரும் சிக்கலை விளைவித்தது.

திருநங்கை தேர்தலில் நின்று மேயராகும் சூழல் வந்திருக்கும் ஆரோக்கியமான சூழலில், அவர்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக எழுந்தது. உச்ச நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டு, மத்திய அரசையும் அங்கீகரிக்க உத்தரவிட்டது. தொடர்ச்சியான இந்த முயற்சிகள் இன்று வருமான வரித்துறை சட்டத்தில் புதிய திருத்தத்தைக் கொண்டுவரும் சூழலைக் கொண்டுவந்துள்ளது. 

இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்ட வருமானவரித்துறையைச் சேர்ந்த அதிகாரி, "பான்கார்டுக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கும்போது, 49 ஏ, 49 ஏஏ ஆகிய படிவத்தில், மூன்றாம் பாலினத்திற்கென தனிக்கட்டம் தரப்பட்டுள்ளதில், அவர்கள் தங்களுக்குரிய பாலினத்தைக் குறிப்பிடலாம். இதன்மூலம், பான்கார்டு பெறுவதில் திருநங்கைகளுக்கு இருந்த பிரச்னை தீர்ந்துள்ளது" என்றார். 

திருநங்கை

மத்திய அரசின் இந்த அறிவிப்பைப் பற்றி 'என் சமூகம்' அமைப்பின் தலைவி சுபிக்‌ஷாவிடம் பேசினோம். "மூன்றாம் பாலினத்தைக் குறிப்பிடுவதற்கு புதிய ஏற்பாடு செய்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியளிக்கிறது. மனதார வரவேற்கத்தக்கது. ஏனெனில், இந்த மாற்றத்தை அளித்திருப்பது மத்திய அரசு. அதனால் இந்தியாவில் உள்ள அனைத்துத் திருநங்கைகளும் பயன்பெறுவர். திருநங்கைகள் பொதுச்சமூகத்தில் ஒருவர் என இணையாக நடத்துவதற்கு இதுவும் உதவும் என நம்புகிறேன்" என்றார். 

திருநங்கைகள் தங்களது குடும்பத்தினரின் எதிர்ப்பைத்தான் முதலில் சந்திக்க வேண்டியுள்ளது. குடும்பத்தினரிடம் தங்கள் உணர்வுகளைப் புரிய வைக்கிறார்கள். அதைக் கடந்து, பொதுச்சமூகத்தில் இவர்கள் பற்றிய பார்வையை மாற்றவும் பெரும் போராட்டத்தை நடத்துகின்றனர். தங்களுக்குக் கிடைத்த சின்னச் சின்ன உரிமைகளைக் கொண்டு, தங்கள் திறமைகளை நிரூபித்து வருகிறார்கள். பட்டதாரிகளாகவும் இசைக் கலைஞர்களாகவும் நடிகர்களாகவும் நடனக் கலைஞர்களாகவும் காவல் துறை அதிகாரிகளாகவும் பல துறைகளில் தடம் பதித்து வருகின்றனர். ஆனபோதும் பொதுச்சமூகத்தில் திருநங்கைகளும் இயல்பான ஒரு நபராகப் பார்க்கப்படும் காலம் இன்னும் வரவில்லை. ஆனாலும், திருநங்கைகளுக்கு அனைத்துத் துறைகளிலும் அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படும் சூழலில், குறிப்பாக அரசுத் தரப்பிலிருந்து வாய்ப்புகள் வழங்கப்படும்போது திருநங்கைகளின் வாழ்வில் ஆரோக்கியமான மாற்றம் நிகழும் என்பதே சமூக செயற்பாட்டாளர்களின் கருத்து. அந்தச் சூழல் அனைத்துத் துறைகளிலும் நிறைவேறும் எனும் நம்பிக்கையை பான்கார்டுக்கு விண்ணப்பிக்க மூன்றாம் பாலினத்துக்கு தனிக்கட்டம் அளித்திருப்பது நமக்குக் காட்டுகிறது. 


டிரெண்டிங் @ விகடன்