வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (10/04/2018)

கடைசி தொடர்பு:20:16 (10/04/2018)

தமிழக மக்களின் உணர்வுபூர்வமான போராட்டங்களை பா.ஜ.க எள்ளி நகையாடுகிறது..! டி.டி.வி.தினகரன் ஆதங்கம்

தமிழக மக்களின் உணர்வு பூர்வமான போராட்டங்களை தமிழக பா.ஜ.க எள்ளி நகையாடுகிறது என்று டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சேலத்தில் போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள். இந்தப் போராட்டத்துக்கு டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்துக்கு 2000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்திருந்தார்கள். இக்கூட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரன், `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மாநில அரசைக் கண்டித்தும் போராட்டம் நடத்துகிறோம். எந்தவோர் இயக்கமும் தலைவர்களால் வழிநடத்தப்படுகிறது. ஆனால், இந்த இயக்கம் புரட்சித் தலைவி அம்மா, சின்னம்மாவின் 1 1/2 கோடி தொண்டர்களால் வழி நடத்தப்படுகிறது. உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பில் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னது. அதை மத்திய அரசு அப்படியே கிடப்பில் போட்டு விட்டு 6 வார காலம் முடியும் போது ஸ்கீம் பற்றி விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். நமக்கு அருகில் உள்ள கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டமன்ற தேர்தல் வருவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் 8 கோடி தமிழக மக்களின் நியாயமான விஷயம் காலம் தாழ்த்தி வருகிறது. 

தமிழகம் முழுவதும் குழந்தைகள், பெண்கள், விவசாயிகள் ஜனநாயக முறைப்படி அறவழியில் உண்ணாவிரதம் செய்து வருகிறார்கள். ஆளுங்கட்சியான எடுபிடி அரசு பேருக்கு ஓர் உண்ணாவிரதம் இருந்தது. தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் இதை எள்ளி நகையாடுகிறார்கள். மத்திய பாரதிய ஜனதா அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் 177.25 டி.எம்.சி தண்ணீர் விடுவார்கள் என்று நடுநிலைவாதிகள் சொல்லுகிறார்கள். மத்திய அரசு இன்னும் காதை பொத்திக்கொண்டு இல்லாமல், கர்நாடகாவிற்கு சாதகமாகச் செயல்படாமல், இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தாமல் தமிழக மக்களின் நியாயமான போராட்டத்தை மனதில் கொண்டு மே 3 வரை காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்கு முறை குழுவையும் அமைக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் ஓர் அரசு இருக்கிறதா? இல்லையா என்று தெரியவில்லை. முதுகெழும்பற்ற அரசாக இருக்கிறது. இந்த அரசு இனி முடியப்போகிறது. போகின்ற போக்கில் நாங்கள் முதுகெலும்பு அற்றவர்கள் இல்லை என்று பொதுமக்களின் நலனைக் கருதி, எதிர் காலத்தில் தேர்தலில் நின்றால் வெற்றி பெற வேண்டும் என்ற சுயநலத்தோடு மத்திய அரசுக்கு அழுத்தத்தை ஆளுங்கட்சி கொடுக்க வேண்டும்.
அம்மா மறைவுக்குப் பிறகு சின்னம்மா சாதி, மத வேறுபாடு இல்லாமல் உங்க மாவட்டத்தை சேர்ந்தவரை முதல்வர் ஆக்கினார். அவர் தன் சமுதாயத்துக்குப் பெருமை செய்து வருவதாகச் சொல்லி இழுக்கு ஏற்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் எதை வேண்டுமென்றாலும் ஏற்றுக்கொள்ளுவார்கள். துரோகத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க