வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (10/04/2018)

கடைசி தொடர்பு:20:37 (10/04/2018)

நெல்லையில் 10-ம் வகுப்பு தேர்வு மையத்தில் முறைகேடு? விசாரணைக்கு உத்தரவு!

நெல்லையில் பத்தாம் வகுப்பு தேர்வு மையத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியில் விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லையில் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்த மையத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியில் விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தேர்வு முறைகேடு சர்ச்சை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார்கள். இந்த மையத்தில் இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் அல்லாமல் மேலும் இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்த மையத்தில் தேர்வு எழுதி வருகிறார்கள். இந்த மையத்தில் இன்று நடைப்பெற்ற கணிதத் தேர்வின் போது,10-ம் எண் கொண்ட தேர்வு அறையின் உள்ளே ஒரு மாணவியின் தந்தை இரண்டு முறை சென்று அந்த மாணவிக்கு விடைகளை எழுதுவதற்கு உரிய உதவிகளைச் செய்துள்ளார். அதனை தேர்வு மையத்தில் இருந்த அலுவலரும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

அத்துடன், தேர்வு நேரம் முடிவடைந்த பின்னர் அந்த அறையின் ஒரு பகுதியில் இருந்த மாணவிகளிடம் விடைத்தாள்களை வாங்கிய தேர்வு மைய அதிகாரி, குறிப்பிட்ட அந்த மாணவியிடமும் அவரது வரிசையில் இருந்தவர்களிடம் விடைத்தாள்களை வாங்காமல் காலாவகாசம் கொடுத்துள்ளார். பிற மாணவிகளை விடவும் 10 நிமிடம் நேரம் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டதால் அவர்கள் கூடுதல் நேரம் தேர்வு எழுதிய பின்னரே, விடைத்தாள்கள் வாங்கப்பட்டுள்ளன. 

இந்த விவகாரம் அந்த மையத்தில் இருந்த மற்ற மாணவிகளை அதிருப்தியடைய வைத்துள்ளது. அதனால், மாணவிகள் இது குறித்து தங்களின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். சில பெற்றோர் இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். காவல்துறையின் பாதுகாப்பு மிகுந்த தேர்வு மையத்தின் உள்ளே ஒரு மாணவியின் தந்தை இரு முறை சென்று உதவி செய்ததுடன், குறிப்பிட்ட மாணவிக்குச் சாதகமாக 10 நிமிட நேரம் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு நெல்லை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேர்வு மையம்

இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டதற்கு, ``பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் சில சம்பவங்கள் நடந்ததாக எனக்குப் புகார் வந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளருக்கும் மாவட்ட கல்வி அதிகாரிக்கும் உத்தரவிட்டிருக்கிறேன். அவர்கள் இது குறித்து விசாரணை நடத்துவார்கள். புகாரில் உண்மை இருக்குமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தப் பள்ளியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறேன். அதில் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும் என நம்புகிறேன். இதே போல பிற தனியார் பள்ளிகளில் விதிமுறை மீறல் நடப்பதாக இதுவரை எனக்குப் புகார் எதுவும் வரவில்லை. தற்போது கிடைத்த குற்றச்சாட்டு குறித்து உண்மையைக் கண்டிபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது’’ எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அந்தப் பள்ளி நிர்வாகம் மற்றும் அந்தத் தேர்வு அறையில் பணியில் இருந்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது.