வெளியிடப்பட்ட நேரம்: 20:56 (10/04/2018)

கடைசி தொடர்பு:20:56 (10/04/2018)

இளைஞர்கள் ஐ.பி.எல் கிரிக்கெட்டை புறக்கணிக்க வேண்டும்..! டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்

இளைஞர்கள் ஐ.பி.எல் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்திற்கு வந்திருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டி.டி.வி.தினகரனிடம் செய்தியாளர்களிடம் பேசும்போது, `ஜல்லிக்கட்டுப் போராட்டம், நீட் தேர்வு போராட்டம் உட்பட அனைத்துப் போராட்டங்களையும் இளைஞர்கள் முன்னெடுத்து நடத்தி வருகிறார்கள். காவிரி நதிநீர் பிரச்னைகளுக்காக தமிழக இளைஞர்கள் ஒன்றிணைந்து போராடி வருகிறார்கள். இந்த நேரத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் நடத்துகிறார்கள். இதை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். நிறைய பணம் கொடுத்து இளைஞர்கள் டிக்கெட் வாங்கியிருப்பார்கள். ஐ.பி.எல் கிரிக்கெட்டைப் புறக்கணித்தால் நம்முடைய போராட்டம் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும்.

இதை இளைஞர்கள் கேட்பதும், கேட்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். தி.மு.க அனைத்துக் கட்சியைச் சேர்த்து போராடவில்லை. அதன் கூட்டணிக் கட்சிகளை இணைத்துப் போராடி வருகிறது. தே.மு.தி.க, பா.ம.க, தனித்தனியே போராட்டம் செய்து வருகின்றன. நாங்கள் அம்மாவின் கட்சி 1 1/2 கோடி தொண்டர்களை வைத்திருக்கும் கட்சி நாங்கள் ஜனநாயக முறைப்படி தொடர்ந்து போராடி வருகிறோம்.
தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது.

சொல்லப்போனால் அதிக வரி வசூல் தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கிடைக்கிறது. அதனால், தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்னையான காவிரி நீரைப் பெறுவதற்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை மிரட்டிப் பேசியிருப்பது கண்டனத்திற்குறியது. இப்படிதான் ஓ.பி.எஸ்.யும், ஈ.பி.எஸ்.,யும் மிரட்டி ஆட்சியையும் இரட்டை இலையும் முடிச்சுப் போட்டு அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

பா.ஜ.க மக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்து வர வேண்டும். இப்படி மிரட்டக் கூடாது. மோடி என்பவர் நம் நாட்டின் பிரதமர் என்னதான் இருந்தாலும் நம் நாட்டு பிரதமருக்கு நாமே கறுப்புக்கொடி காட்டுவது சரியில்லை. எதிர்க்கட்சிக்காரர்கள் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் செய்கிறார்கள். அவர்கள் செய்யட்டும். நாங்கள் கறுப்புக் கொடி காட்டத் தயாராக இல்லை. தமிழக மக்களின் நலனை உணர்ந்து பிரதமர் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.