வெளியிடப்பட்ட நேரம்: 21:21 (10/04/2018)

கடைசி தொடர்பு:17:53 (09/07/2018)

நிஜாம் பாக்கு நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை..!

புதுக்கோட்டையிலுள்ள நிஜாம் பாக்கு நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் பிரபலமான நிஜாம் பாக்கு நிறுவனம் புதுக்கோட்டை நகரில் உள்ள ராஜகோபாலபரத்தில் இயங்கி வருகிறது.ரயில்வே நிலையத்தின் அருகில் இருக்கும் இந்த நிறுவனத்தின் அலுவலகம், ஃபேக்டரி போன்றவை ஒரே இடத்தில் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்துக்கு இன்று காலை 11-மணிக்குமேல் இரண்டு டெம்போ டிராவலர், இரண்டு இன்னோவா, மற்றும் வேறு இரண்டு காரில் என்று மொத்தம் ஆறு வாகனங்களில் வருமானவரித்துறையினர் நுழைந்திருக்கிறார்கள். அலுவலகம், ஃபேக்டரி ஆகிய பகுதிகளை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உடனடியாக கொண்டுவந்த வருமானவரித்துறையினர், முழுவீச்சில் சோதனையையும் ஆய்வையும் மேற்கொண்டனர்.

ஒரு பெரிய நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தும் விசயம், கிட்டதட்ட நான்கு மணிநேரங்கழித்தே வெளியே கசிந்திருக்கிறது. அதன்பிறகே, அங்கு ஊடகங்களும் செய்தியாளர்களும் சென்றனர். வந்த அதிகாரிகள் அத்தனை பேரும்  சென்னையிலிருந்தும் வெளிமாநிலத்திலிருந்தும் வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பார்ப்பதற்கு ராமேஸ்வரம் சுற்றுலா செல்லும் நபர் போன்ற ஏற்பாட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் வந்ததாகக் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் அதுகுறித்த விளக்கங்களை நிஜாம் நிறுவனத்தின் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் தெரிகிறது.