`எடப்பாடி அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை' - காத்திருப்புப் போராட்டம் நடத்தும் உள்ளாட்சி ஊழியர்கள்!

நகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள், சம்பளத்துக்கான அரசாணையை நடைமுறைப்படுத்தக் கோரி, இரண்டாவது நாளாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்  காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். 

இதுகுறித்து, சிவகங்கை மாவட்ட சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் வீரையாவிடம் பேசும்போது,  ``கடந்த 40 ஆண்டுகாலமாக கிராமப்புற துப்புரவுத் தொழிலாளர்களும், மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி ஆபரேட்டர்களும் இரவு பகல் பார்க்காமல் கிராமத்தின் தூய்மையைத் தங்களின் குறிக்கோளாகக்கொண்டு பணிசெய்துவருகிறார்கள். தமிழகம் முழுவதும் 12,524 ஊராட்சிகளிலும், சுமார் 70 ஆயிரம் பம்ப் ஆபரேட்டர்களும், 40 ஆயிரம் கிராமப்புற சுகாதாரப்பணியாளர்களும் வேலைசெய்துவருகிறார்கள். மிகக்குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு வேலை செய்யும் இவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் விதமாக அரசாணை ஒன்றை வெளியிட்டது, உள்ளாட்சித் துறை. பம்ப் ஆபரேட்டர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.11,236 எனவும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ரூ.9,234 எனவும் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி அரசு, தொழிலாளர்களை கேவலப்படுத்தும் விதமாக, பம்ப் ஆபரேட்டர்கள் ஒரு நாளைக்கு 4 மணிநேரம் வேலை செய்யும் பகுதிநேர ஊழியர்கள் என்று நீதிமன்றத்தில் வாதிடுகிறது. இவர்களின் வாதப்படி பார்த்தாலும், மாதச் சம்பளமாக ரூ.5,618 வழங்க வேண்டும். இதையும் கொடுக்காமல், தொழிலாளர்கள் வயிற்றில் அடித்துவருகிறது தமிழக அரசு.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளில், சுமார் 1,500 பம்ப் ஆபரேட்டர்களும், 500 துப்புரவுத் தொழிலாளர்களும் மற்றும் தூய்மைப்பணி காவலர்கள் 250 பேரும் பணிசெய்துவருகிறார்கள். இவர்கள் பெறும் மாதச் சம்பளம் டீ குடிக்கக்கூட பத்தாது. மாதம் வெறும் ரூ.600 சம்பளம் வழங்கப்படுகிறது. அதையும் இந்த மாவட்ட நிர்வாகம் கடந்த 8 மாதங்களாக வழங்கவில்லை. கால முறை ஊதியம் பெறும் ஒரு தொழிலாளி, பணியில் இருந்து ஓய்வுபெறும்போது ரூ.50 ஆயிரமும், மாத ஓய்வூதியமாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு இருக்கிறது. அந்த உத்தரவெல்லாம் காற்றில் பறந்துகொண்டிருக்கிறது. எங்களுக்கு, அரசு வழங்கிய உத்தரவை அமல்படுத்த வேண்டும். அதுவரைக்கும் எங்களுடைய காத்திருப்புப் போராட்டம் இரவு பகல் பாராமல் தொடரும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!