போராட்டம் வன்முறையானது எப்படி? - அண்ணா சாலை `திக் திக்’ நிமிடங்கள் 

போராட்டம்

சென்னை அண்ணா சாலையில் நடந்த ஐ.பி.எல் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய தடியடியில், இயக்குநர் களஞ்சியம் உட்பட சிலர் படுகாயமடைந்தனர். போராட்டத்தில் போலீஸாரும் தாக்கப்பட்டனர்.  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் பல்வேறு கட்டங்களாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி  நடந்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியை நடத்தக் கூடாது என்று பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புக்குரல் கொடுத்தன. ஆனால், அதையும்மீறி போட்டி நடந்தது. அதைக் கண்டித்து, இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, எம்.எல்.ஏ-க்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, இயக்குநர்கள் வெற்றிமாறன், களஞ்சியம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி எனப் பல அமைப்புகள் போராட்டக்களத்தில் குதித்தன. இதனால், நேற்று மாலை சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

போராட்டம்

 போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டினர். அப்போது போலீஸார், நாம் தமிழர் கட்சியினரால் தாக்கப்பட்டனர். அந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. போலீஸாரைத் தாக்கியதற்கு, நடிகர் ரஜினி கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு விமர்சனங்களும் எழுந்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். போலீஸார் நடத்திய தடியடியில், சினிமா இயக்குநர்கள் வெற்றிமாறன், களஞ்சியம், ரமேஷ் உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்தனர். அவர்களைப் போராட்டக்காரர்களே மருத்துவமனையில் சேர்த்தனர்.

போராட்டத்தின்போது நடந்தது என்ன என்று விசாரித்தோம். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், "அண்ணா சிலை சந்திப்பு சாலை, திருவல்லிக்கேணி காவல் நிலையம், வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாக் கழகம் என மூன்று இடங்களில் போலீஸார் தடுப்புகளை வைத்திருந்தனர். நாங்கள் போராட்டம் நடத்த முறையாக அனுமதி பெற்றிருந்தோம். அறவழியில்தான் போராட்டம் நடந்தது. அப்போது உணர்ச்சிவசப்பட்ட சில இளைஞர்கள், தடுப்புகளைத் தகர்த்தெறிந்தனர். இதனால்தான், போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது. அதில் போராட்டக்காரர்களும் போலீஸாரும் தாக்கப்பட்டனர்.

வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்புப் பகுதி வரை போராட்டக்காரர்களை விரட்டிய போலீஸாரைத் திடீரென இளைஞர்கள் சிலர் தாக்கத் தொடங்கினர். அவர்களிடம் தன்னந்தனியாகப் போலீஸ்காரர் ஒருவர் சிக்கியிருக்கிறார். போலீஸாரைத் தாக்கியது கண்டனத்துக்குரியது. போராட்டத்தில், பாதுகாப்புக்கு வந்த போலீஸாருக்கும் சேர்த்துதான் நாங்கள் போராட்டம் நடத்திவருகிறோம். போலீஸார் தாக்கியதில் தமிழர் நலப் பேரியக்கத்தின் கரூர் மாவட்டப் பொறுப்பாளர் ரமேஷ் படுகாயமடைந்தார். அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அதுபோல, இயக்குநர் களஞ்சியமும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்" என்றனர்.

போலீஸார் கூறுகையில், "நாங்கள் எதிர்பார்த்ததைவிட திடீரென கட்டுக்கடங்காத கூட்டம் கூடிவிட்டது. அதில் சில போராட்டக்காரர்கள் தடுப்பைத் தாண்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகில் செல்ல முயன்றனர். அவர்களைத்தான் தடுத்தோம். அதையும் தாண்டி செல்ல முயன்றதால், தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள்மீது வழக்கு பதிவுசெய்துள்ளோம். போட்டியைக் காணவந்த ரசிகர்கள்மீதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்குதல் நடத்தினர். அதைத் தடுத்துள்ளோம். போலீஸாரின் கூட்டு முயற்சியால், சென்னை அண்ணாசாலை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பியது" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!