`வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது சரியானதே’ - ரஜினி கருத்துக்கு தமிழிசை வரவேற்பு

ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது, அரசியல் கட்சியினர் காவலர்களைத் தாக்கியதற்கு, நடிகர் ரஜினி கண்டனம் தெரிவித்திருப்பதை தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழிசை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாகக் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நேற்று, ஐபிஎல் போட்டிக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. இதனால், ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் போராட்டக்களமாகின. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் சிலர் காவலர்களைத் தாக்கும் வீடியோவைப் பகிர்ந்து, அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், ’'வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறைக் கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லையென்றால், நாட்டுக்கே பேராபத்து” என்று பதிவுசெய்திருந்தார்.

இவரின் கருத்துக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தனது ட்விட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் கருத்தில், பொதுமக்களைப் பாதிக்கும் அளவுக்கும், சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் அளவுக்கும் நடந்துகொள்ளும் வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது சரியானதே” எனப் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!