வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (11/04/2018)

கடைசி தொடர்பு:13:15 (11/04/2018)

சென்னையில் ஓடும் ரயிலிலிருந்து இறங்கிய மூதாட்டி - நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலர் 

ரயில் நிலையம்

தாம்பரத்தில் ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்ற மூதாட்டியைத் துரிதமாகச் செயல்பட்டு காவலர் மற்றும் பயணிகள் காப்பாற்றினர். அந்தக்காட்சி ரயில்நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

 சேலத்திலிருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை 3 மணியளவில் தாம்பரத்துக்கு வந்தது, பிளாட்பாரம் 5-ல் நின்ற ரயில் பயணிகள் இறங்கியவுடன் புறப்பட ஆயத்தமானது. அப்போது, மூதாட்டி ஒருவர், கீழே இறங்குவதற்காகத் தன்னுடைய உடைமையைப் பிளாட்பாரத்திலிருந்த ஒருவரிடம் கொடுத்துள்ளார். அவர் இறங்குவதற்குள் ரயில் புறப்பட்டது. 
ஓடும் ரயிலிருந்து இறங்க முடியாமல் வாசலில் அந்த மூதாட்டி தவித்தார்.

இதைப் பாதுகாப்புப் பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் பிரதீப்குமார் மூதாட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடன் சில பயணிகளும் மூதாட்டியைக் காப்பாற்ற போராடினர். ரயில் சென்றுகொண்டிருக்கும்போதே மூதாட்டியை அலேக்காக அவர்கள் கைப்பிடித்து தூக்கி, பிளாட்பாரத்தில் கீழே இறக்கிவிட்டனர். அதன்பிறகே அனைவரும் நிம்மதியடைந்தனர். இந்தச் சம்பவம் முழுவதும் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதைப் பார்க்கும்போது உயிரைப் பணையம் வைத்து மூதாட்டியை ரயில்வே பாதுகாப்புப் படை காவலரும் பயணிகளும் காப்பாற்றியது தெளிவாகத் தெரிகிறது. 

 எந்தவித விசாரணையில்லாமல் மூதாட்டி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனால் அவரது பெயர், முகவரி தெரியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.