`நான் தமிழன் இல்லையா..? சீமானுக்கு ஸ்டாலின் பரவாயில்லை!' - கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி

`என்னைத் தனிப்பட்ட முறையில் சீமான் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களது போராட்டங்களை ஒடுக்குவதைத் தவிர வேறு வழியில்லை' என அமைச்சர்களிடம் கொதிப்பைக் காட்டியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

`நான் தமிழன் இல்லையா..? சீமானுக்கு ஸ்டாலின் பரவாயில்லை!' - கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஐ.பி.எல் போட்டிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 21 நாம் தமிழர் கட்சித் தொண்டர்களைக் கைது செய்துள்ளது தமிழகக் காவல்துறை. ` என்னைத் தனிப்பட்ட முறையில் சீமான் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களது போராட்டங்களை ஒடுக்குவதைத் தவிர வேறு வழியில்லை' என அமைச்சர்களிடம் கொதிப்பைக் காட்டியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

`காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' எனத் தமிழக அரசியல் கட்சிகள், திரையுலகம், பொதுநல அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதன் ஒருபகுதியாக, 'சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது' எனக் கூறி, நேற்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டவர்கள் திரண்டுவந்து போராட்டம் நடத்தினர். சேப்பாக்கம் மைதானம் செல்லும் வழியில் நடந்த இந்தப் போராட்டத்தில் காவல்துறைக்கும் அரசியல் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையின் இந்தத் தாக்குதலுக்கு எதிராக நாம் தமிழர் கட்சித் தொண்டர்களும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தக் காட்சியைப் பதிவுசெய்து ட்வீட் செய்த நடிகர் ரஜினி, ' வன்முறைக் கலாசாரத்தைக் கிள்ளி எறியவில்லையென்றால் நாட்டுக்கே பேராபத்து' எனக் கொதித்திருந்தார். ரஜினியின் இந்தக் கருத்தை பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசையும் அமைச்சர் ஜெயக்குமாரும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சித் தொண்டர்களின் போராட்டம் தொடர்பாக, அமைச்சர்களிடம் தீவிரமாக விவாதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

சீமான்சீமானின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய முதல்வர், 'காவிரிக்காக இந்தப் போராட்டம் நடக்கவில்லை. நமக்கு எதிராகத்தான் அவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் தெரியாமல் சீமான் பேசுகிறார். சீமான் உட்பட சிலர் நமது ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தைக் கொடுக்கிறது. ஐ.பி.எல் போராட்டக் களத்துக்கு தினகரன் வந்திருந்தால் ரிமாண்ட் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியது வந்திருக்கும். இதைத் தெரிந்துகொண்டுதான் அவர் வரவில்லை' என விவரித்தவர், தொடர்ந்து பேசும்போது, 'சீமான் ஒரு தமிழன். தமிழுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். அம்மாவிடமும் அவர் நல்ல நட்பில் இருந்தார். இதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலில் நமக்கு ஆதரவாக அவர் பிரசாரமும் செய்திருக்கிறார். இப்போது அவர் ஏன் நம்மை எதிர்க்கிறார்.. தமிழன் என்று சொல்லிக்கொண்டு நம்மை ஒரு மாதிரியும் தினகரனை ஒரு மாதிரியும் பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் தமிழன் இல்லையா, திராவிடன் இல்லையா. அம்மாவும் கருணாநிதியும் செய்யாததை, தமிழுக்காக நான் செய்து வருகிறேன். குறிப்பாக, இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஆளுநருக்கு, இந்த அரசு பரிந்துரைக் கடிதம் கொடுத்திருக்கிறது. இதையெல்லாம் இவர்கள் பாராட்ட மாட்டார்கள். இதற்கெல்லாம் ஊக்கம் கொடுத்தால்தான், தமிழர்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய முடியும்.

இவர்களுக்கு மு.க.ஸ்டாலின் எவ்வளவோ பரவாயில்லை. 'அரசாங்கம் கவிழ வேண்டும்' என நினைக்காமல் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறார். தினகரன் போன்றவர்களுக்கு நாம் ஆட்சியில் இருப்பதையே தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாகரிக அரசியலையா தினகரன் நடத்திக்கொண்டிருக்கிறார்... அதனால்தான் தினகரன் பக்கம் நின்றுகொண்டு, `இழவு (நடராசன் மறைவு) வீட்டுக்கு எடப்பாடி வரவில்லை' எனப் பேசுகிறார் சீமான். இழவு வீட்டுக்குச் சென்றிருந்தால், எப்படியெல்லாம் அரசியல் செய்திருப்பார்கள் என்பதை யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. தேவையற்ற கருத்துருவாக்கத்தை சீமான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

`இது ஒரு எடுபிடி அரசு' என என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார். என்னை விமர்சனம் செய்யுங்கள். பிரச்னைகளைக் கையாளும்விதத்தில் விமர்சிப்பது என்பது வேறு. நான் செய்த நல்ல விஷயங்களையும் ஏற்றுக்கொண்டு விமர்சனம் செய்வது என்பது வேறு. யார் யாரெல்லாம் எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்ற அனைத்துப் பின்னணிகளும் எனக்குத் தெரியும். தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை ஒருக்காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினிகாந்த்தைவிடவும் ஸ்டாலினைவிடவும் நம்மிடம் சீமான் நெருக்கமாக இருப்பார் என நினைத்தோம். இனி அவர் நடத்தும் போராட்டங்களைக் கடுமையாக அடக்குவதைத் தவிர வேறு வழியில்லை' எனக் கொந்தளிப்போடு பேசியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!