சீமான் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு!

ஐ.பி.எல் எதிர்ப்புப் போராட்டத்தில் காவலர்களைத் தாக்கியதாகச் சீமான் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சீமான்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், மிகுந்த எதிர்ப்புகளையும் மீறி நேற்று போட்டிகள் நடைபெற்றன. சென்னை சேப்பாக்கத்தில் போட்டிகள் தொடங்கும் முன் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. போராட்டம் நடத்தியவர்களைப் போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். சுமார் 750-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம், சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கிரிக்கெட் ரசிகர்களையும் போலீஸாரையும் தாக்கியுள்ளனர். போலீஸாரைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. காவலர்கள் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், காவலர்களைத் தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் என்பது தெரியவந்தது. நாம் தமிழர் கட்யைச் சேர்ந்த சுமார் 21 பேர்மீது முன்னதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று அண்ணாசாலையில் போராட்டம் நடந்தது. அதில், சென்னை சங்கர்நகரைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் செந்தில்குமார் மற்றும் ஆயுதப்படை காவலர் ஜெயசந்திரன் ஆகியோர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டனர். இதில் அவரது உதடுகள் கிழிந்தன. செந்தில்குமார், கொடுத்த புகாரின்பேரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேரை கைதுசெய்துள்ளோம். அதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 47, 148, 341, 294 பி (பொது இடங்களில் தகாத வார்த்தைகளால் பேசுதல்), 324, 332, 336 (சட்டவிரோதமாக கூடுதல்), 353 (ஆயுதங்களால் தாக்குதல்), 307 (கொலை முயற்சி), 506 (11) (கொலை மிரட்டல்) ஆகிய 10 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். இதில் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் குமாலைத் தாக்கியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 10 பேர் மீது தடையை மீறி சென்றதாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
காவலர் ஜெயசந்திரன் கொடுத்த புகாரில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்களையும் தேடிவருகிறோம். இதுத்தவிர ஊர்வலத்தில் தடையை மீறி சென்றதாகப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர் மற்றும் 500 பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!