வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (11/04/2018)

கடைசி தொடர்பு:13:53 (11/04/2018)

பா.ம.க முழு அடைப்புப் போராட்டம்; புதுச்சேரி இயல்பு வாழ்க்கை முடங்கியது!

பா.ம.க நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

புதுச்சேரி
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் தமிழகம்- புதுச்சேரியில் பா.ம.க சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி, தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல இந்த முழு அடைப்புக்கு வணிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் நேரு வீதி, காமராஜர் சாலை, மறைமலையடிகள் சாலை, குபேர் அங்காடி, பெரிய அங்காடி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.

பாமக

புதுச்சேரி அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. புதுச்சேரியிலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வந்தன. அதையடுத்து அங்கு சென்ற போராட்டக்காரர்கள் அந்தப் பேருந்துகளை மறித்து தர்ணாவில் ஈடுபட்டனர். திரையரங்குகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும், பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இன்று நடைபெறுவதாக இருந்த முழு ஆண்டுத் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி

இந்த முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரி ரயில் நிலையத்துக்குச் சென்ற பா.ம.க-வினர் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்குப் புறப்படத் தயாராக இருந்த ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டவர்களைக் காவல்துறை கைது செய்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க