`தைரியம் இருந்தால் சாலை வழியாக வாருங்கள்’ - மோடிக்கு சவால்விடும் வைகோ!

'நாளை தமிழகத்துக்கு வரும் மோடி, தைரியம் இருந்தால் சாலை வழியாக வரட்டும்' என மோடிக்கு வைகோ சவால் விடுத்துள்ளார்.

வைகோ

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில், ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறும் ராணுவத் தளவாட கண்காட்சியைக் காண பிரதமர் மோடி ஏப்ரல் 12-ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். தமிழகத்தில் காவிரி தொடர்பான பிரச்னைகள் வலுத்துவரும் நிலையில், மோடி தமிழகம் வரும்போது அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டப்படும் என எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, “தமிழகத்தில் காவிரிக்காகப் போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், நாளை சென்னை வரவிருக்கும் மோடி துணிவிருந்தால் சாலை வழியாக வரட்டும். டெல்லியிலிருந்து விமானமூலம் சென்னைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர்மூலம் ஐ.ஐ.டி வளாகத்துக்குள் நேராக நுழைந்து, மோடிக்காக ஐ.ஐ.டி சுவரை இடித்துக் கட்டப்பட்ட சாலை வழியாகச் சென்று கண்காட்சியில் பங்கேற்க இருக்கிறார். எதற்கு இவ்வளவு பாதுகாப்பு. கறுப்புக்கொடிகளைப் பார்த்து பிரதமர் ஏன் பயப்பட வேண்டும். கொடிகளில் குண்டு வைத்துவிடுவோம் எனப் பயப்படுகிறாரா... இப்படி ஒரு பயந்தாங்கொள்ளியான பிரதமரை நான் பார்த்ததே இல்லை. உங்களுக்கு உண்மையில் தைரியம் இருந்தால், நீங்கள் சாலை வழியாக வாருங்கள்” என ஆவேசமாகக் கூறினார்.

வைகோ-வின் இந்தக் கருத்துக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் கருத்தில், “பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் வழக்கமான ஒன்றே, அதைக் கோழை, பயந்தாங்கொள்ளி எனக் கீழ்த்தரமாக விமர்சித்த வைகோ-வை வன்மையாகக் கண்டிக்கிறோம், இதைச் சொல்லும் வைகோ, யாருக்குப் பயந்து கள்ளத்தோணியில் இலங்கை சென்றார். பிரதமர், முன்னறிவிப்பு இல்லாமல் தீவிரவாத நாடான பாக்கிஸ்தானுக்கே தைரியமாகச் சென்றவர்” எனப்
பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!