காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி காஞ்சிபுரத்தில் பா.ம.க-வினர் ஆர்ப்பாட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பா.ம.க சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் வெளிமாநிலத்தில் இருந்து பட்டு ஜவுளி எடுக்க வந்தவர்கள் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஏமாற்றமடைந்தனர். பெட்டிக்கடை முதல் பெருவணிக நிறுவனங்கள் வரை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

காவிரி மேலாண்மை வாரியம், பா.ம.க., காஞ்சிபுரம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி பா.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன் தலைமையில் சுமார் 500 பேர் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். திருமால்பூரிலிருந்து சென்னை செல்லும் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதுபோல் செங்கல்பட்டிலும் சுமார் 200 பா.ம.க-வினர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் தள்ளிவிட்டு தபால் நிலையம் உள்ளே செல்ல முயன்றதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். கேளம்பாக்கம் பகுதியில் கர்நாடகப் பதிவு எண் கொண்ட லாரியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மாமல்லபுரம் அருகே ராணுவக் கண்காட்சி நடைபெறுவதால் பெரும்பாலான காவலர்கள் அந்தப் பணிக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். குறைந்த அளவே காவலர்கள் இருப்பதால் போராட்டக்காரர்களை சமாளிப்பது காவல்துறைக்கு சவாலாகவே இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!