வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (11/04/2018)

கடைசி தொடர்பு:15:20 (11/04/2018)

`ஐ.பி.எல் போட்டியை நடத்துவது அரசின் வேடிக்கையான செயலையே காட்டுகிறது!’ - நல்லகண்ணு வேதனை

``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அதை மாநில அரசும் வற்புறுத்தவில்லை. தமிழகமே போராட்டக்களமாக மாறி உள்ள சூழலில் ஐ.பி.எல்.போட்டி நடத்திடுவது மாநில அரசின் வேடிக்கையான செயலைக் காட்டுகிறது" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார். 

போராட்டத்தில் நல்லகண்ணு உள்ளிட்டோர்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நல்லகண்ணு, ``மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது தமிழகத்தில் அனுமதி அளிக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. விதிப்படி மன்னார் வளைகுடா கடல் பகுதியிலிருந்து 25 கி.மீ. தொலைவைத் தாண்டிதான் இதுபோன்ற தொழிற்சாலைகள் அமைய வேண்டும். ஆனால், 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஆலைத் துவக்கத்திலிருந்து பல விதிமீறல்களைச் செய்துள்ளதால்தான், உச்ச நீதிமன்றம் கடந்த 2013 ம் ஆண்டு ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது. வழக்கமாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்படும் அனுமதி புதுப்பித்தல் என்பது உடனடியாக வழங்கப்பட்டு விடும். தற்போது இதற்கான அனுமதியை அரசு ரத்து செய்துள்ளது. அது, மக்களின் இத்தனை நாள் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி ஆகும். நிலம், நீர், காற்று ஆகியவற்றிற்கு தொடர் மாசு ஏற்படுத்தியும், மக்களுக்கு உடலில் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தி வரும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும். இந்த ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர வேண்டும். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அத்தீர்ப்பினை செயல்படுத்திட மத்திய அரசை, மாநில அரசு வற்புறுத்தவும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி பல்வேறு கட்சிகளும் போராட்டக் களத்தில் குதித்துள்ள நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்திடக் கூடாது என அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போட்டியினை நடத்திட அரசு அனுமதி அளித்திருப்பது மத்திய, மாநில அரசுகளின் வேடிக்கையான செயலைக் காட்டுகிறது. இது மக்களின் எழுச்சிப் போராட்டங்களை முழுமையாக திசை திருப்பும் செயல். இது போன்ற வேடிக்கையான செயல்பாடுகளில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி மத்திய அரசுக்கு, மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்றார்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, நல்லகண்ணு, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அழகுமுத்து பாண்டியன் உட்பட 150-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்த நேரத்தில், கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க