``அவர்கள் இன்னும் அதிலிருந்து மீளவில்லை!” - `ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 11

``அவளைப்போலவே (ஹாசினி) நானும் உங்களுக்கு ஒரு மகளாக இருக்கிறேன். அதன்மூலம் ஒரு லைஃப் கிடைக்கும்” என்று ஆறுதல் கூறினேன். அவர் சந்தோஷப்பட்டார்.

``அவர்கள் இன்னும் அதிலிருந்து மீளவில்லை!” - `ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 11

`துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால், அஃது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே’ என்று ஒரு பொன்மொழி சொல்லப்படுவதுண்டு. ஆம், உண்மைதான்... ஹாசினி குடும்பம் அடைந்த துன்பம் சாதாரணமானதா? இல்லையே... எந்தக் காலத்திலும் மறக்க முடியாத பாடத்தையல்லவா அந்தச் சம்பவம், அவர்கள் மனதில் விதைத்துச் சென்றிருக்கிறது.

ஹாசினி

“ஹாசினியின் நினைவிலிருந்து மீளவில்லை!” 

தஷ்வந்துக்குத் தண்டனை வழங்கப்பட்ட பின்னர், ஹாசினியின் குடும்பம் இப்போது எப்படியிருக்கிறது என அந்தக் குடும்பத்தின் நண்பரும், `நட்சத்திரா பவுண்டேஷன்’ என்ற என்.ஜி.ஓ அமைப்பின் நிறுவனருமான ஷெரின் பாஸ்கோவிடம் கேட்டோம். ``எப்போதும் போலவே வேலைக்குச் சென்றுவருகிறார் ஶ்ரீனிவாஸ் பாபு. ஆனால், மகளை இழந்த வடு மட்டும் அவர் மனதிலிருந்து முற்றிலும் மாறவே இல்லை. அவருடைய மனைவி ஶ்ரீதேவியும் அதே கவலையுடன்தான் இருக்கிறார். நிதி உதவி எதையும் அந்தக் குடும்பம் எதிர்பார்க்கவில்லை. ஹாசினி மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே எண்ணமாக இருக்கிறது” என்றவர், சிறு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தொடர்ந்தார். ``நான், ஹாசினியின் பிறந்த நாள் அன்று அவள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு அவள் படத்துக்கு மாலை போட்டிருந்தனர். அவள் படத்துக்கு முன் அவளுக்குப் பிடித்த ஸ்வீட்ஸ், சாக்லேட்ஸ், பிஸ்கட்ஸ் மற்றும் ஃப்ரூட்ஸ் போன்றவற்றை வைத்திருந்தனர். அதைப் பார்த்ததும் எனக்கே கண்ணீர் வந்துவிட்டது. ஶ்ரீனிவாஸ் பாபுவிடம், ‘கவலைப்படாதீர்கள். அவளைப்போலவே (ஹாசினி) நானும் உங்களுக்கு ஒரு மகளாக இருக்கிறேன். அதன்மூலம் ஒரு லைஃப் கிடைக்கும்’ என்று ஆறுதல் கூறினேன். அவர் சந்தோஷப்பட்டார். ஆனாலும், அவர்கள் ஹாசினியின் நினைவிலிருந்து இன்னும் மீளவில்லை” என்றார், சற்றே வருத்தத்துடன். 

``ஹாசினியின் மரணத்துக்கு நியாயம் கிடைத்துள்ளது என்று நினைத்திருந்தோம். ஆனால், தற்போது அவன் (தஷ்வந்த்) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறான். இதனால், நாங்கள் மீண்டும் கவலையில் இருக்கிறோம்” என்றார் ஶ்ரீனிவாஸ் பாபு, கண் கலங்கியபடி. 

ஹாசினியின் தந்தை பாபு

பாதிப்பு ஏற்படுத்தும் இணையதளங்கள்!

``கண்ணீரிலிருந்து இன்னும் மீளாமல் இருக்கும் ஹாசினியின் குடும்பத்துக்கு மேல்முறையீட்டில் வழங்கப்படும் தீர்ப்பே சற்று ஆறுதலாக இருக்கும்” என்று எல்லோரும் சொல்லும் இந்தவேளையில், ``தஷ்வந்தைப் போன்றவர்கள் குழந்தைகள் மீது ஈர்ப்புக்கொள்வது ஏன்” என்று மனநல மருத்துவர் திருநாவுக்கரசுவிடம் பேசினோம்... ``சமூக ஊடகங்கள், இணையதளங்களின் தாக்கம் இளம்தலைமுறையைப் பெரிதும் பாதித்திருக்கிறது. அவற்றைச் சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் தப்பித்துவிடுகிறார்கள். கையாளத் தெரியாதவர்கள், இதுபோன்ற குற்றங்களைச் செய்து, சிக்கிக்கொள்கிறார்கள். குழந்தைகள் வன்புணர்வைப் பல வலைதளங்கள் கற்றுத் தருகின்றன. டீன் ஏஜைக் கடந்த இளைஞர்களை, அவை அதிகம் பாதித்திருக்கின்றன. குழந்தைகளை மிரட்டி எளிதில் பணியவைத்துவிட முடியும் என்ற எண்ணம். ஆனால், அவன் உடலை எடுத்துச் சென்று எரித்ததைப் பார்க்கும்போது, அவன் அனுபவப் பின்னணியுள்ள குற்றவாளியாகவே தெரிகிறான். திட்டமிடப்பட்ட குற்றமாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது” என்றார், மிகத் தெளிவாக.

என்ன சொல்கிறது பாக்ஸோ?

குழந்தைகள் தேசத்தின் சொத்து என்கிறது, தேசியக் கொள்கை. ஆனால், இங்குதான் மூன்றில் இரண்டு குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். ஹாசினியைப் போல எத்தனையோ குழந்தைகள் தினமும் யாரோ ஒரு காமுகனால் துன்புறுத்தப்படுகிறார்கள். 2014-ம் ஆண்டில் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 8,904  பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டு, அது 14,913 ஆக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் 2015-ம் ஆண்டில் மட்டும் 125 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல அரசுகளிடம் எந்தப் புள்ளிவிவரமும் இல்லை.

பாலியல் வன்முறைக்கு உள்ளாகி குழந்தைகள் உயிரிழக்கும்போதுதான் இந்த விவகாரம் பெரிதாகி வெளியே வருகின்றன. ஆனால், மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அறிக்கையின்படி, இந்தியாவில் பிறக்கும் மூன்றில் இரண்டு குழந்தைகள், உடல்ரீதியான தீங்கிழைத்தலுக்கு உள்ளாகின்றனர். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், 2012-ம் ஆண்டில் பாக்ஸோ (Protection of Children from Sexual Oeeences Act-POCSO) சட்டத்தைக் கொண்டுவந்தது மத்திய அரசு. இந்தச் சட்டப்படி குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அளிக்கலாம். அதிகபட்சம் ஓராண்டுக்குள் வழக்கின் விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

ஷெரின் பாஸ்கோ

இந்தச் சட்டத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் செயல்படுத்துவதும் மேம்படுத்துவதும் மாநிலங்களில் உள்ள குழந்தைகள் நல உரிமை ஆணையத்தின் பணி. ஆனால், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் (பாக்ஸோ) போன்ற மிக வலிமையான சட்டங்கள் இருந்தும், அவை குறித்த உரிய விழிப்புஉணர்வு இல்லாததால் குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை என்பதுதான் வருத்தமான உண்மை.

யுனிசெஃப் நடத்திய ஆய்வு!

குழந்தைகளைப் பொறுத்தவரை தற்போது பெரும்பாலும் உடல், உணர்வு, பாலியல்ரீதியான தொந்தரவுகளை அதிகம் சந்திக்கின்றனர். இதுதவிர நிராகரிப்புகள், கைவிடப்படுதல், தவறாய்ப் பயன்படுத்துதல் போன்ற பாதிப்புகளுக்கும் அவர்கள் ஆளாகின்றனர். இதுகுறித்து உலக நலவாழ்வு நிறுவனம் (WHO), ``இதுபோன்ற வன்முறைகள் குழந்தைகளின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால், அவை எதிர்காலத்தில் உடலளவிலும், மனதளவிலும் பெரும் சிக்கலையும், சிலவேளைகளில் மரணத்தையும் தந்துவிடுகிறது” என்கிறது. 

கடந்த ஆண்டு இந்தியக் குழந்தைகள் 1,000 பேர் தேர்வு செய்யப்பட்டு யுனிசெஃப் அமைப்பால் ஆய்வு செய்யப்பட்டனர். இந்த ஆய்வில், 96 சதவிகிதக் குழந்தைகள் இந்தியாவில் நடக்கும் வன்முறைகள் காரணமாகப் பயப்படுவதாகக் கூறியுள்ளனர். மேலும், அதில் 51 சதவிகிதம் பேர் நேரடியாகத் தாங்களே பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளனர். 

தேவநேயன்குழந்தைகளின் உடலைக் காயப்படுத்தும் செயல்களே உடல்ரீதியிலான வன்முறையாகும். அவை பெரும்பாலும் வீடுகளிலும், ஆதரவு இல்லங்களிலும், பணி செய்யும் இடங்களிலும் நிகழ்கின்றன. குழந்தைகளுடைய மனதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை, உணர்வுரீதியிலான வன்முறையாகும். இவை சரியான வாழ்க்கைச் சூழல் அமையாதது, அச்சுறுத்துவது, தரக்குறைவாய் நடத்துவது உள்ளிட்டவற்றால் நிகழக்கூடியவை. இதனால் குழந்தைகளுடைய எதிர்காலமும், வளமான வாழ்வும் கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. நான்கு சுவர்களுக்குள்ளேயே நடக்கும் வன்முறை பாலியல்ரீதியிலானது. இது மிகமிகக் கொடுமையானது. இந்த வன்முறைக்குத்தான் சிறுமி ஹாசினி ஆளாகியதோடு, எரித்துக் கொலையும் செய்யப்பட்டாள்.

தப்பிவிடும் பாலியல் குற்றவாளிகள்!

பாலியல் குற்றவாளிகள் குறித்து குழந்தைகள் நல உரிமை ஆர்வலர் தேவநேயனிடம் பேசினோம். ``வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை, `இவன் ஒரு பாலியல் குற்றவாளி. உளவியல்ரீதியாகப் பாதிப்புடையவன். இவனிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்’ எனப் பொது இடங்களில் விளம்பரம் செய்வார்கள். ஆனால், இங்கு, பெரும்பாலான பாலியல் குற்றவாளிகள் தண்டனையே பெறாமல் தப்பிவிடுகிறார்கள். பாக்ஸோ சட்டப்படி பதிவுசெய்யப்படும் வழக்குகளில், ஐந்து சதவிகித வழக்குகளில்கூடக் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில்லை” என்றார். 

ஹாசினி சிறகடிக்கும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!