ரயிலைக் கவிழ்க்க சதியா? பொள்ளாச்சியைப் பதறவைத்த குண்டு வெடிப்பு!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குண்டு வெடிப்பு

மதுரையிலிருந்து கோவைக்கு, பொள்ளாச்சி வழியாகத் தினந்தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரையிலிருந்து இன்று காலை 7.25 மணிக்கு கிளம்பிய பயணிகள் ரயில், நண்பகல் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்கு 1 கி.மீ முன்பு உள்ள பத்திரகாளியம்மன் கோயில் வீதி வழியாக வரும் தண்டவாளத்தில் பலத்த சத்தத்தோடு வெடி வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ரயில் நிறுத்தப்பட்டு தண்டவாளத்தைப் பரிசோதித்தனர். ஆனால், பெரிய அளவில் சேதம் இல்லாததால், ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். குறிப்பாக, வெடிச் சம்பவம் நடந்த இடத்தில் சிறிய பாஸ்பரஸ் குண்டுகளும் வெடி மருந்தும் இருந்தது தெரியவந்தது. பின்னர், அதன் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், சுமார் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். இதனிடையே, ரயிலை கவிழ்க்க ஏதும் சதி நடந்ததா. இல்லை காவிரி, ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இதைச் செய்தார்களா போன்ற கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!