`பூ என நினைத்தோம்; ஆனால் இருப்பது பூ நாகம்’ - ரஜினியைக் கடுமையாகச் சாடிய பாரதிராஜா!

சென்னையில் நேற்று நடந்த போராட்டம் குறித்து இன்று இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சீமான், பெ.மணியரசன், தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி, இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், கெளதமன் எனப் பலர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

பாரதிராஜா

அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா, ‘நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்தினோம். நேற்று நடந்த போராட்டத்தில் பத்திரிகையாளர்கள், காவலர்கள் தாக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. பலர் வன்முறை நடந்ததாகப் பேசுகிறார்கள். இது வினைக்கு நடந்த எதிர்வினை. எல்லோரும் எதிர்வினையைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். வினையைக்  குறித்து யாரும் பேசவில்லை. வினை இல்லாமல் எதிர்வினை நடக்காது.
 
நாளை  பிரதமர் வரும்போது கண்டிப்பாகக் கறுப்புக்கொடி காட்டுவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துக்  கொடுத்திருந்தால். நாங்கள் பிரதமரை சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்றிருப்போம். இத்தனை பிரச்னைக்கு மத்தியில் அவர் இங்கு வருவது சரி இல்லை. அதனால் கறுப்புக்கொடி காட்டுவோம். அவர் விமான நிலையம் வரும்போது விமான நிலையம் முழுவதும் கறுப்புக்கொடியாக இருக்கும். தண்ணீரைப்போல் ஏர்போர்ட்டில் நுழைவோம். 20-ம் தேதி நடக்கும் போட்டியின்போது போராட்டம் வேறு விதமாக இருக்கும்’ என்றார். 

காவலர்கள் தாக்கப்பட்டது குறித்து ரஜினி சொன்னக் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேட்டதுக்கு, “முன்னர் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அப்போது எல்லாம் வன்முறையாக அவருக்குத் தெரியவில்லையா. அப்போது எல்லாம் குரல் கொடுக்காதவர்கள் இப்போது குரல் கொடுக்கிறார்கள் என்றால், இந்தப் பெட்டிக்குள் பூ இருக்கிறது என நினைத்தோம். ஆனால் இருப்பது பூ நாகம் என இப்போதுதான் தெரிகிறது. மைதானம் நோக்கி நாங்கள் கட்சிப் பாகுபாடு இன்றி போராட்டம் நடத்தினோம். ஓர் அறிக்கைகூட அவர் விடவில்லையே. அவருக்கு டப்பிங் செய்கிறார்கள். இன்னும் தன்னை முழு அரசியல்வாதி எனச் சொல்லவில்லை. சொல்லி நடக்கட்டும். பிறகு ஊனம் எங்குள்ளது எனச் சொல்கிறேன்” என்றார் பாரதிராஜா.
 
பின்னர் பேசிய சீமான், ``நாங்கள் யாரையும் தாக்கவில்லை. நான் விலக்கித்தான் விட்டேன். ஆனால், நான் தாக்கியதாகச் சொல்கிறார். அப்போது யாரும் கேட்கவில்லை. களத்துக்கு வராமல் தொண்டர்களை அனுப்பிவிடுவதில்லை... பாரதிராஜா நண்பர் என்று கூறும் ரஜினி, என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டிருக்கலாமே. ட்விட்டரில் சொல்கிறவர்... செய்தியாளர்களைச்  சந்தித்துச் சொல்லிருக்கலாமே. மெளனப் போராட்டத்தில் பேசாமல் இருப்பதல்ல போராட்டம். களத்துக்கு வர வேண்டும். நேற்று கிரிக்கெட் பார்க்கப் போனவர்களுக்கும் சேர்த்துத்தான் போராடி வருகிறோம்” என்றார். 

இயக்குநர் அமீர் பேசும்போது, “ரஜினி எப்போது ட்விட்டரில் பேசினாலும், அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாக மட்டும்தான் பேசுகிறார். போராட்டக் களத்துக்கு வந்தால்தான் காவல்துறையினர் பற்றி தெரியும். அலங்காநல்லூரில் போராட்டம்  நடந்தபோது ஏன் பேசவில்லை” என்றார். அப்போது குறுக்கிட்ட பாரதிராஜா, ‘அலங்கா நல்லூர் எங்கு இருக்கும் என்றாவது தெரியுமா’ என்றார். 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!