கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி உள்ளிட்ட 4 பேர்மீது வழக்கு பதிவு!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போலியாக இன்சூரன்ஸ் ஆவணங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட அணுமின் நிலைய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போலியாக இன்ஷூரன்ஸ் ஆவணங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட அணுமின் நிலைய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கூடங்குளம் அணுமின் நிலையம்

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாளர்களை வேலைக்கு அழைத்து வருவது, அதிகாரிகள் செல்வதற்கான வாகனங்கள் என ஒப்பந்த அடிப்படையில் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களைச் செட்டிகுளத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் அகிலன் டிராவல்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து கூடங்குளம் அதிகாரிகள் எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். 

இந்த நிறுவனமானது, அணுமின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கு முறையான இன்ஷூரன்ஸ் கட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிறுவனமானது, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து பழைய வாகனங்களை விலைக்கு வாங்கி வந்து தமிழ்நாட்டில் புதிய வாகனமாகப் பதிவு செய்து இயக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. 

இது குறித்து செட்டிகுளத்தைச் சேர்ந்த லிங்கம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். அதில், `அகிலன் டிராவல்ஸ் உரிமையாளர் ராஜகோபால், மோசடி செய்து வாகனங்களை இயக்குகிறார். இன்ஷூரன்ஸ் கட்டாமலேயே மோசடியாகப் பத்திரங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபடுவதற்கு உடந்தையாகக் கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகளும் உள்ளனர். அதனால் அந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் மற்றும் அவருக்கு உதவியாகச் செயல்படும் அதிகாரிகள்மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த வள்ளியூர் நீதிமன்றம், கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகளான திருநாவுக்கரசு, பார்த்திபன், சுதர்சன் மற்றும் அகிலன் டிராவல்ஸ் உரிமையாளர் ராஜகோபால்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள கூடங்குளம் காவல்நிலையத்துக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கூடங்குளம் போலீஸார் போலியான இன்ஷூரன்ஸ் தயாரித்து அணுமின் நிலையத்தில் வாகனங்களை இயக்கி  மோசடியில் ஈடுபட்டதற்காக 4 பேர் மீதும் 420, 465, 467, 471 ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அணுமின் நிலைய அதிகாரிமீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!