`மோடியின் உண்ணாவிரத முடிவுக்கு நாங்கதான் காரணம்' - அமைச்சர் கடம்பூர் ராஜூவின் அடடே பேட்டி

``காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி அ.தி.மு.க. மட்டுமே தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. பிரதமர் மோடியின் உண்ணாவிரத முடிவுக்கு அ.தி.மு.க மட்டுமே காரணம்" எனச் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

Minister kadamboor raju meet to press

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஸ்டெர்லைட் ஆலைக்கான மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமத்தைப் புதுப்பிக்க இயலாது என அரசு நிராகரித்ததே இந்த ஆலையை மூடுவதற்கான செயல்பாடுகள்தான். எனவே, இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரிய பிரச்னையில் தேசியக் கட்சிகளால் எந்தவொரு நிரந்தர தீர்வும் ஏற்படவில்லை. அ.தி.மு.க-தான் தொடர்ந்து போராடி வருகிறது. மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த தி.மு.க-கூட எந்த முயற்சியும்  எடுக்கவில்லை. நீதிமன்றம் கொடுத்த 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து இருந்தால் தமிழிசை கூறுவதுபோல அந்தப் பெருமை அவர்களுக்கு சேர்ந்திருக்கும். ஆனால், அப்படிச் செய்யாத காரணத்தினால்தான் இன்று தமிழ் உணர்வாளர்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டத்துக்கு அரசு பக்கபலமாக உள்ளது. அரசு உரிய பாதுகாப்பு கொடுத்த காரணத்தினால்தான், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி-கள். நாடாளுமன்றத்தை முடக்கிய காரணத்தால் பிரதமர் மோடி உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமரின் உண்ணாவிரத முடிவுக்கு  அ.தி.மு.க-தான் காரணம். அ.தி.மு.க-தான் காவிரிப் பிரச்னையில் தொடர்ந்து போராடி வருகிறது. மற்றவர்கள் இதனை வைத்து அரசியல் செய்கின்றனர்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!