போலீஸ் காவலை மீறி பா.ம.க-வினர் நடத்திய ரயில் மறியல் போராட்டம்!

PMK Train stir

மயிலாடுதுறையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டும், அவர்களது தடைகளை மீறி ரயில்மீது ஏறி கறுப்புக்கொடி காட்டி பா.ம.க-வினர் போராட்டம் நடத்தினர்.  

பா.ம.க.வினர் நடத்திய  ரயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு பா.ம.க-வினர் இன்று அழைப்பு விடுத்திருந்தனர். அதை மயிலாடுதுறை வணிகர் சங்கத்தினர் ஏற்று கடையடைப்புச் செய்து போராட்டத்துக்கு ஆதரவு தந்தனர். இதையும் மீறி பழைய பேருந்து நிலையத்தில் டீக்கடை ஒன்று திறந்திருக்க, அங்கு வந்த பா.ம.க இளைஞர்கள் அந்தக் கடைமீது சரமாரி கல்வீச்சு நடத்தினர். பயந்துபோன கடை உரிமையாளர் உடனே கடையைப் பூட்டிவிட்டு ஓடிவிட்டார். அதன்பின், 300-க்கும் மேற்பட்ட பா.ம.க-வினர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 'அமைத்திடு, அமைத்திடு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு. வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே மோடி அரசே தமிழகத்தை வஞ்சிக்காதே' என்று கோஷமிட்டவர்கள் ரயில் மறியல் செய்ய முன்னேறி சென்றபோது, 50-க்கும் மேற்பட்ட போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

போலீஸார் அமைத்திருந்த தடுப்பு கட்டைகளைத் தூக்கியெறிந்து உள்ளே நுழைந்த பா.ம.க-வினர் ரயில் நிலையத்துக்குள் புறப்படத் தயாராக இருந்த திருநெல்வேலி ரயிலை மறித்தனர். ரயில் இன்ஜின் மீது ஏறி கறுப்புக்கொடியைப் பறக்கவிட்டு போராட்டம் நடத்தினர். ''காவிரி எங்கள் பிறப்புரிமை. இதைத் தடுப்பவன் எவன்டா. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. எங்கள் கட்சித் தலைமை ஆணையிட்டால் எதையும் செய்வோம்'' என்று கொந்தளித்தனர். இதனால் திருநெல்வேலி ரயில் ஒரு மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

பா.ம.க மாநிலத் துணை பொதுச் செயலாளர் அய்யப்பன் தலைமையில் நடந்த போராட்டக்குழுவினர் சுமார் 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!