வெளியிடப்பட்ட நேரம்: 20:09 (11/04/2018)

கடைசி தொடர்பு:20:09 (11/04/2018)

``நாடு முழுவதும் ஒரேநேரத்தில் தேர்தல் சாத்தியமா?" - என்ன சொல்கிறது இந்திய கம்யூனிஸ்ட்!

``நாடு முழுவதும் ஒரேநேரத்தில் தேர்தல் சாத்தியமா?

டுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களையும் நடத்தலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

நாடாளுமன்றத்துக்கும், மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு தருணங்களில் இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், கால விரயம் மற்றும் செலவும் குறையும் என்பதோடு, அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சீராகச் சென்றடையும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு.

இந்தச் சூழ்நிலையில் மத்திய சட்ட ஆணையம் தனது திட்ட வரைவு அறிக்கையில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது. மீதமுள்ள 12 மாநிலங்களுக்கும் 2024-ம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

ஓரே நேரத்தில் தேர்தல், மோடி

அதன்படி, தமிழ்நாடு, கேரளா தவிர டெல்லி, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா, மேற்குவங்கம், புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்தலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களைத் தவிர்த்து ஏனைய மாநிலங்களுக்கு 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் தேர்தல் நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ள சட்ட ஆணையக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படும்பட்சத்தில், ஒருங்கிணைந்த தேர்தல் திட்டம் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்துக்கும், மாநிலச் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறுகையில், ``நடைமுறையில் இது சாத்தியமில்லாதது. ஏற்கெனவே 1967-ம் ஆண்டு வரை அப்படித்தான் தேர்தல் நடந்தது. நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்திற்கும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. பிறகு 1967-ல் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி, 72 வரைக்கும் மத்தியில் அதிகாரத்தில் இருக்கிற சூழலில், காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு 1971-ம் ஆண்டிலேயே தேர்தலை நடத்தினார்கள். அப்போது, தமிழகச் சட்டசபையை ஆறு மாதத்திற்கு முன்னரே கலைத்துவிட்டு 1971-ல் சட்டசபைக்கும் தேர்தலை நடத்தினார்கள். அதற்குப் பிறகு, நாடாளுமன்றம் கலைக்கப்படுது. மீண்டும் 1980, 1984-ம் ஆண்டு எனத் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்துக்கு மாறி,மாறி தேர்தல் வந்தது. 

இரா.முத்தரசன்இன்றையச் சூழலில், நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியப்படாது. அதற்கு மத்திய அரசு தெரிவிக்கும் காரணங்கள் என்னவோ சரியானவைதான். தேர்தல் நடத்துவதற்கான செலவு குறையும்; அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஒரே நேரத்தில் முடியும். வாக்காளர்களும் ஒரே நேரத்தில் ஓட்டுப்போட்டு விட்டுச் சென்று விடுவார்கள். இவை எல்லாம் சரிதான். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமற்றது.

மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தனித்தனியாகத் தேர்தல் நடைபெறும்போது, வெவ்வேறுவிதமான இரண்டு பிரச்னைகளையும் தனித்தனியாக மக்கள் முன் விவாதத்திற்கு எடுத்து வைக்க முடிகிறது. மாநில நலன் சார்ந்த பிரச்னைகள், மாநில உரிமைகள், மாநில நிதி என்பன போன்ற விவாதம் வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தமட்டில், அதற்கான முக்கியத்துவமும் முன்வைக்கப்படுகிறது. இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வைக்கும்போது, எதற்கு முக்கியத்துவம் என்பதல்லாமல், சட்டசபைக்கு முக்கியத்துவம் அதிகமாகி, மாநிலச் சட்டசபையில் யாரை ஆதரிக்கிறார்களோ, அவர்களையே மத்தியிலும் ஆதரிக்கும் நிலை வரும். இது கடந்த காலங்களிலும் நடந்துள்ளது. எனவே, ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை, இப்போதைக்கு ஆழமாக யோசித்து செயல்படுத்துவதுடன், அவசரப்பட்டு நடத்தாமல் இருப்பது நல்லது, எனவே, இதை நடைமுறைப்படுத்துவது கடுமையான சிரமம்.  

உதாரணத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலோடு, மாநிலச் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறும்பட்சத்தில், ஒரு மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணி அமைக்க முடியாத சூழல் ஏற்படலாம். அப்படியே அமைத்தாலும் 6 மாதத்திலோ அல்லது ஓராண்டிலோ மாநில அரசு கவிழலாம். அதுபோன்ற சூழலில் அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வரும்வரை, மாநிலச் சட்டசபைக்குத் தேர்தல் நடத்தாமல் இருக்க முடியுமா? அது எப்படி சாத்தியமாகும்?  எனவே, இந்தியா ஒரு பெரிய நாடு. ஒரே மாநிலம் என்றால் அது பொருந்தும், இங்கு பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இருப்பதால், ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமற்றது" என்றார். 

தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கட்டும்; தேர்தலுக்குப் பின் பொறுப்பேற்கக் கூடிய அரசு மக்கள் நலன் சார்ந்த அரசாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்