வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (11/04/2018)

கடைசி தொடர்பு:17:57 (11/04/2018)

இது மான்கள் நடமாடும் பகுதி..! மோடிக்காக இடிக்கப்பட்ட ஐ.ஐ.டி சுவர்

நாளை சென்னை வரவுள்ள பிரதமர் மோடிக்காக ஐ.ஐ.டி வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு தனியாக ஒரு வழி அமைக்கப்பட்டுள்ளது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடி

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியைக் காண பிரதமர் மோடி ஏப்ரல் 12-ம் தேதி தமிழகம் வருகை தரவுள்ளார். பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராணுவ தளவாடங்கள் நடைபெறும் கண்காட்சிக்குச் செல்கிறார். பிறகு, திருவிடந்தையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.ஐ.டி கல்லூரி வளாகத்துக்குள் வந்து இறங்கி, அங்கிருந்து சாலை வழியாக அடையாறு சென்று அங்கு நடைபெறும் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா நினைவு கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் ஐ.ஐ.டி வளாகத்துக்கு வந்து, அங்கிருந்து சென்னை விமான நிலையம் செல்கிறார். மோடியின் வருகையை முன்னிட்டு ஹெலிபேட் அமைப்பதற்காக ஐ.ஐ.டி வளாகச் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மோடியின் கார் செல்வதற்காகப் புதிய வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளாகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காவிரி தொடர்பான பிரச்னைகள் வலுத்து வரும் நிலையில், மோடி தமிழகம் வரும்போது அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டப்படும் என எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதனால் மோடியின் சாலை வழிப் பயணத்தைத் தவிர்க்கவே இத்தனை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் இன்னொரு பகுதியாக, ஐ.ஐ.டி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்ட இடம் மான்கள் அதிகமாக நடமாடக்கூடிய பகுதி என்பதால் அங்கிருந்து மான்கள் சாலைக்கு வர வாய்ப்புள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் பிரதமர் மோடியின் வருகையையொட்டி கிண்டியில் உள்ள சிறுவர்கள் பூங்கா நாளை ஒரு நாள் இயங்காது என பூங்காவின் வன உயிரினக் காப்பாளர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.