வெளியிடப்பட்ட நேரம்: 05:54 (12/04/2018)

கடைசி தொடர்பு:10:26 (12/04/2018)

``ராணுவக் கண்காட்சி...பொதுமக்கள் செல்வது எப்படி..?''

``ராணுவக் கண்காட்சி...பொதுமக்கள் செல்வது எப்படி..?''

சென்னைக் கிழக்குக் கடற்கரைசாலையில் உள்ள திருவிடந்தை என்ற இடத்தில் இந்திய ராணுவத்தின் 10-வது கண்காட்சி தொடங்கியுள்ளது. நிறைவு நாளான 14-ம் தேதியன்று, கண்காட்சியைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

நான்கு நாள்கள் நடைபெறும் கண்காட்சிக்கு ரூ.800 கோடி செலவில் திருவிடந்தையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் நடத்தப்பட்ட, ராணுவக் கண்காட்சிகளில் இதுவே மிகவும் பிரமாண்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சி ஏப்ரல் 11-ம் தேதி காலை தொடங்கியது. இதில், ராணுவ வர்த்தகம் தொடர்பாக 6 கருத்தரங்கங்கள் நடைபெற்றன. கண்காட்சி தொடங்கியுள்ள போதிலும் அதிகாரபூர்வமாக ஏப்ரல் 12-ம் தேதிதான் முழு அளவில் நடக்கிறது. அப்போது, மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவத் தளவாடக் கண்காட்சியைப் பார்வையிடுகிறார். 

ராணுவக் கண்காட்சி

கண்காட்சியின் மூன்றாவது நாளன்று இந்திய-ரஷ்ய ராணுவத் தொழில் துறை மாநாடு நடைபெறுகிறது. இந்தியாவின் சார்பில் 200 தொழிலதிபர்களும் ரஷ்யா தரப்பில் 100 தொழிலதிபர்களும் கலந்துகொள்கிறார்கள். 4-வது நாள் கண்காட்சி பொதுமக்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், ஏப்ரல் 14-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவர். பாஸ்போர்ட், ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம். எனினும், கட்டணம் செலுத்த விரும்புவோர், ரூ.100 செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத் தளவாடக் கண்காட்சி முழுவதையும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராணுவக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அரங்கில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் வலிமைகளை ஒருங்கிணைந்த வகையில் எடுத்துரைப்பதாக இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மோடி

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், உள்நாட்டிலேயே வடிவமைத்து உற்பத்தி செய்த தளவாடங்கள் குறித்து நேரடிச் செயல் விளக்கமும் கண்காட்சியின்போது அளிக்கிறது. இதில், தேஜஸ் – இலகு ரக விமானம், அர்ஜுன் எம்.கே.-II பீரங்கி, அர்ஜுன் கவச வாகனம் மற்றும் பழுதுபார்ப்பு வாகனம், டி-72 இழுவை வாகனம், டி-72 பாலம் அடுக்குப் பீரங்கி, சக்கரத்துடன் கூடிய கவச அமைப்பு, நடமாடும் கண்காணிப்புக் கருவி மற்றும் அதிநவீனப் போர்த் துப்பாக்கிகள் போன்ற சாதனங்களை இந்நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது.

வெளிப்புறக் காட்சிக்கு வைக்கப்படும் பொருள்களில், செலுத்தும் கருவியுடன் கூடிய நிர்பை ஏவுகணை, தானியங்கி ஆளில்லா தரையிறங்கு வாகனம், எம்.பி.டி. அர்ஜுன் எம்.கே-1, அஸ்த்ரா ஏவுகணை, குறைந்த உயரத்திலான நடமாடும் ராடார் கருவி, நடுத்தர ரக ராடார் கருவி, வாகன அணிவகுப்பு ஜாமர், பன்னோக்குத் தூய்மையாக்கல் கருவி, வருணாஸ்த்ரா-கனரக நீர்மூழ்கி எதிர்ப்பு மின்சார டார்பிடோ மற்றும் உயிரிக் கழிவறை போன்றவையும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.  

உள்ளரங்கில் 400-க்கும் மேற்பட்ட கருவிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில், விமானவியல் தொடர்பான தொழில்நுட்பங்கள், ஏவுகணைகள், போர்க்கவசங்கள், போர் எதிர்ப்பு வாகனங்கள், கடற்படைச் சாதனங்கள், மின்னணு, தகவல் தொழில்நுட்ப மற்றும் வாழ்வுஅறிவியல் சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, டிஜிட்டல் முறையிலான பாவனைப் போர் விளையாட்டு மண்டலம், விஸ்தரிப்பு யதார்த்தம், இணைய யதார்த்தம், மற்றும் பாசாங்குச் சாதனங்கள் போன்றவையும் இந்த அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

போர்க்கப்பல்

பாதுகாப்புக் கண்காட்சியையொட்டி, சென்னைத் துறைமுகத்தில், இந்தியக் கடற்படைக் கப்பல்களைப் பொதுமக்கள் பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் போர்க்கப்பலைப் பொதுமக்கள் வரும் ஏப்ரல் 13-ம் மற்றும் 15-ம் தேதி ஆகிய இரு நாள்களிலும், தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் பார்வையிடலாம். இந்தியக் கடற்படைக் கப்பலைப் பார்வையிட விரும்புவோர் சென்னைத் தீவுத் திடல் பொருட்காட்சி மைதான வளாகத்திலிருந்து அதற்கான சிறப்புப் பஸ்களில் ஏறி, துறைமுகத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துறைமுகத்தில் உள்ள போர்க் கப்பலின் உள்ளே சென்று பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்வையி்ட்ட பிறகு சிறப்பு பஸ் மூலம் தீவுத் திடலுக்குத் திரும்பி அழைத்து வரப்படுவர். 

எனவே, போர்க்கப்பல்களைப் பார்வையிட விரும்புவோர் தீவுத் திடலுக்கே வரவேண்டும். சென்னைத் துறைமுகவாயிலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. போர்க்கப்பலைப் பார்வையிட 5 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்; அவர்கள், அரசு வழங்கிய போட்டோவுடன் கூடிய  அடையாள அட்டையையும், அதன் நகலையும் வைத்திருக்க வேண்டும். நகலைப் பாதுகாப்புப் பிரிவில் அவர்கள் கொடுத்து விடவேண்டும். மேலும், கப்பலைப் பார்வையிடுவோர் கையில் கைப்பை, கேமிரா, குடிநீர்ப் பாட்டில், குடை, தடி ஆகியவற்றைக் கொண்டு வரக் கூடாது. கப்பலில் பார்வையிடும்போது புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. பாதுகாப்பு காரணங்களால் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் குடியேற்ற நடைமுறைகள் காரணமாக வெளிநாட்டவர்களுக்கும் அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க