வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (11/04/2018)

கடைசி தொடர்பு:20:22 (11/04/2018)

`காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை வரி கொடுக்காதீர்கள்!’- அழைப்புவிடுத்த விவசாயிகள்

காவிரி மேலாண்மை வாரியம் கொடுக்கும்வரை வரி செலுத்த வேண்டாம்  என திருச்சி கிராமங்களில் தண்டோரா மூலம் வரிகொடா இயக்கத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.

விவசாயிகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. விவசாயச் சங்கங்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் காவிரிக்காகப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இந்தி எதிர்ப்பு, வானொலி நிலையம் முற்றுகை, காவிரியில் புதைந்துக்கொண்டு போராட்டம் பல்வேறு வகைகளில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக முழங்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சிகள், சுங்கச் சாவடிகளை அடித்து உடைத்தும், வருமான வரித்துறை, விமான நிலையங்கள் முற்றுகை என்ற வகைகளில் போராடி வருகின்றனர்,

அதேபோல், ஐபிஎல் போட்டியைப் புறக்கணிக்கக் கோரி சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்னதாக போராட்டம் நடந்தது.  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், சென்னையில் போட்டியை நடத்தக் கூடாது என முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட கலவரங்கள், தடியடி, கைது உள்ளிட்டவற்றால் சென்னை நேற்று இரவுவரை பரபரப்பாக இருந்தது. 

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை வரி செலுத்த வேண்டாம் என்கிற முழக்கத்தை முன்வைத்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ம.சின்னதுரை தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறுப்புக்கொடி பிடித்தபடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். திருச்சி மாவட்டம், வயலூர், அதவத்தூர், அல்லித்துறை பகுதிகளில்  தண்டோரா  போட்ட அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதவரை வீட்டுவரி, குடிநீர் மற்றும் சொத்துவரி உள்ளிட்ட வரிகளைச் செலுத்த வேண்டாம் என முழங்கி, `வரிகொடா இயக்கம்’ வேண்டுகோள் வைக்கப்படுகிறது என முழங்கினார்கள். இந்தப் போராட்டத்தால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க