'உங்க அறிவைக் கண்டு வியக்கிறேன்!' - எச்.ராஜாவுக்கு நடிகரின் பதிலடி

பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜாவின் தவறான வலைதள பதிவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார், நடிகர் செளந்தரராஜா.

காவிரிப் பிரச்னைக்குப் பல்வேறு தரப்பினர் போராடி வருகிறார்கள். சமீபத்தில் திரைத்துறையினர் போராட்டம் நடத்தியபோது, 'ராணுவத்தையே அனுப்பினாலும் அஞ்சமாட்டோம்' என நடிகர் சத்யராஜ் பேசியிருந்தார்.

இந்நிலையில், போராட்டத்தில் இருந்த சில இளைஞர்களை காவலர்கள் தாக்குவது போலவும், தாக்கப்படும் இளைஞர்கள் காவலர்களிடம் கெஞ்சுவதுபோலவும் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, 'ராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம்' எனக் கமென்ட் கொடுத்து, அந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் கணக்கில் பதிவேற்றியிருந்தார், பா.ஜ.க. தேசியச் செயலாளர் தலைவர் எச்.ராஜா.

ஹெச்.ராஜா - செளந்தரராஜா

அந்தப் புகைப்படத்தில் இருப்பவர், `சுந்தரபாண்டியன்', `தர்மதுரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் செளந்தரராஜா. தவிர, இந்தப் புகைப்படம் ஜல்லிக்கட்டிற்காக மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் எடுத்த படம். எச்.ராஜாவின் இந்த ட்வீட்டிற்குப் பதிலடி கொடுத்துள்ள செளந்தரராஜா, `என்ன சொல்ல... இது மெரினா போராட்டக் களத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். உங்க திறமையைக் கண்டு வியக்கிறேன். வாழ்க ஜனநாயகம்!' என எச்.ராஜாவை டேக் செய்து பதிலடி கொடுத்திருக்கிறார். 'இப்படித் தப்புத் தப்பா எதையாவது போஸ்ட் பண்றதே எச்.ராஜாவோட அட்மினுக்கு வேலையாப் போச்சு!' எனக் கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள், நெட்டிசன்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!