வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (11/04/2018)

கடைசி தொடர்பு:22:00 (11/04/2018)

`அமைச்சர் திறந்து வைத்த தண்ணீர்ப் பந்தலில் பானையே இல்லை!’ - கொதிக்கும் மக்கள்

நெல்லையில் அமைச்சர் ராஜலெட்சுமி திறந்து வைத்த தண்ணீர்ப் பந்தலில் பானை கூட இல்லாமல் காலியாகக் கிடப்பதைப் பார்த்து அப்பகுதி மக்கள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர். நகரின் முக்கியப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக யாருக்கும் பயன்படாமல் கிடைக்கும் அந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நெல்லையில் அமைச்சர் ராஜலெட்சுமி திறந்து வைத்த தண்ணீர்ப் பந்தலில் பானை கூட இல்லாமல் காலியாகக் கிடப்பதைப் பார்த்து அப்பகுதி மக்கள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர். நகரின் முக்கியப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக யாருக்கும் பயன்படாமல் கிடைக்கும் அந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அமைச்சர் திறந்த தண்ணீர் பந்தல்

நெல்லைச் சந்திப்பு இரட்டை மேம்பாலத்தின் அடிப்பகுதியில் கூட்டுறவுப் பேரங்காடி உள்ளது. எப்போதும் மக்கள் நெருக்கடி அதிகமாக இருக்கக்கூடிய இந்தப் பகுதியில், கடந்த மார்ச் 24-ம் தேதி தண்ணீர்ப் பந்தல் திறக்கப்பட்டது. அமைச்சர் ராஜலெட்சுமி நேரில் வந்திருந்து இந்தத் தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்தார். கட்சியின் அமைப்புச் செயலாளர்களான மனோஜ் பாண்டியன், சுதா பரமசிவன் உள்ளிட்ட கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் இதில் பங்கேற்றனர். 

அ.தி.மு.க-வின் நெல்லை மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளரும் கூட்டுறவுப் பேரங்காடி இயக்குநருமான பல்லிக்கோட்டை செல்லத்துரை ஏற்பாட்டில் இந்தத் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. பந்தலைச் சுற்றிலும் கட்சியின் விளம்பரங்கள் அதிகமாக வைக்கப்பட்டிருந்தன. பந்தலுக்கு அருகிலும் ஃபிளக்ஸ் போடுகள் வைக்கப்பட்டு, சாதாரண தண்ணீர் பந்தலுக்காக அளவுக்கு அதிகமான விளம்பரத்துடன் திறக்கப்பட்டது.

அந்தப் பந்தலின் மீது அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட 13 பேரின் படங்கள் பொறிக்கப்பட்ட ஃபிளக்ஸ் கட்டப்பட்டது. அத்துடன், பந்தலின் இருபுறமும், கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்று  இயக்குநர்களாகத் தேர்வான 18 பேரின் பெயர்கள் இடம்பெற்ற போர்டு வைக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டபோது, அங்கிருந்த அனைவருக்கும் தர்பூசணி வழங்கப்பட்டது. பெரும் கூட்டத்தினர் கூடி உற்சாகமாக அதனைத் திறந்து வைத்தார்கள். 

முதல்நாளில் பந்தலின் உள்ளே தண்ணீர் பானை வைக்கப்பட்டிருந்தது. அடுத்தடுத்த நாள்களில் மண் பானை உள்ளே இருந்த போதிலும் தண்ணீர் ஊற்றி வைக்கப்படவில்லை. ஆனால், ஓரிரு தினங்களில் அந்தப் பானையையும் யாரோ எடுத்துச் சென்று விட்டதால் தண்ணீர் பந்தல் காலியாகக் கிடக்கிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்தவர்கள் கூறுகையில், ``அரசியல்வாதிகள் விளம்பரத்துக்காக எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து செயல்படுவார்கள் என்பதற்கு இந்தத் தண்ணீர் பந்தலே சாட்சி. படாபடோபமாக இந்தத் தண்ணீர்ப் பந்தலைத் திறந்து வைத்தவர்கள், அதில் தண்ணீரை தொடர்ந்து வைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காலியாக கிடக்கும் தண்ணீர் பந்தல்

இந்தத் தண்ணீர்ப் பந்தலில் தண்ணீர் இருக்கும் என்கிற நம்பிக்கையில் இந்த வழியாகச் செல்லக்கூடிய மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் உள்ளே சென்று பார்த்துவிட்டு தண்ணீர் இல்லாமல் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள். கோடை வெப்பத்தின் தாக்கத்தில் தவிக்கும் மக்களுக்குக் குடி தண்ணீர் கொடுக்கவே முடியாத இவர்கள், மக்களின் நலனுக்காக எதைச் செய்து விடப்போகிறார்கள்?. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் இந்தப் பந்தலை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்கள் ஆற்றாமையுடன்.