`அடித்துத் துன்புறுத்துகிறார்கள்!’ - காப்பகத்திலிருந்து தப்பி கிராமத்தில் தஞ்சமடைந்த பெண்கள்

காப்பகத்திலிருந்து தப்பிய பெண்கள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கடந்த ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகிறது தனியார் பெண்கள் காப்பகம். இங்கிருந்து நேற்று காலை இரண்டு பெண்கள் தப்பி வந்து அருகில் இருக்கும் வடுகபட்டி என்ற ஊரில் உள்ள டீ கடை ஒன்றில் தஞ்சமடைந்தனர். விவரம் கேட்ட ஊர் காரர்களிடம், ``காப்பகத்தில் எங்களை அடித்துத் துன்புறுத்துகிறார்கள், சொல்வதைக் கேட்கவில்லையென்றால் குடிக்கும் பொருளில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விடுகிறார்கள். பிறகு என்ன நடக்கிறது என்றே தெரியாது. தினம் தினம் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் அங்கே இருக்கிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். தப்பி வந்த பெண்களைத் தேடி காப்பக நிர்வாகிகளான அப்துல் காதர் முனீர் (39) காதர் மீரா மைதீன் (28) ஆகிய இருவரும் வடுகபட்டிக்கு வந்தனர். அங்கே பெண்கள் பற்றி விசாரித்ததும் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அவர்களை அடித்துத் துவைத்துவிட்டனர். அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தையும் உடைத்தனர். சம்பவம் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை மீட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களை அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடைபெற்றது.

பின்னர், பெரியகுளம் கோட்டாட்சியர் தங்கவேல் காப்பகத்திற்குச் சென்று அங்கிருக்கும் பெண்களிடம் விசாரணை நடத்தினார். சம்பந்தப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் காப்பகத்துக்கு இது புதிது இல்லை எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ``ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது. மாவட்ட நிர்வாகத்திடம் புகார்கள் அதிகம் சென்றதால் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது ஆறு பெண்கள் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு வைத்தனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இனியும் மாவட்ட நிர்வாகம், இந்தக் காப்பக விசயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட சமூக நலத்துறை தூங்கிக்கொண்டிருக்கிறதா?’’ என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!