வெளியிடப்பட்ட நேரம்: 00:51 (12/04/2018)

கடைசி தொடர்பு:10:12 (12/04/2018)

`களைகட்டிய  ஜல்லிக்கட்டு; மலைக்கவைத்த மஞ்சுவிரட்டு' - புதுக்கோட்டை அருகே கோலாகலம்!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசலில், ஜல்லிக்கட்டும் மற்றும் பொன்னமராவதி அருகே மறவாமதுரையில் மஞ்சுவிரட்டும் நடைபெற்றது. இதில், மாடுகள் முட்டியதில் ராப்பூசலில் 21 பேரும் மறவாமதுரையில் 3 பேரும் காயமடைந்தனர்.

 ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டையை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசலில் உள்ள முனியாண்டவர் கோயில்  திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஜல்லிக்கட்டு களைகட்டியது. இதைக் காண்பதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள். கடந்த வருடம் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிய பின், முதலில் ஜல்லிக்கட்டு நடந்தது இந்த ராப்பூசலில்தான். அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர்தான் இந்தப் போட்டியை நடத்தினார். அப்போது, இரண்டுபேர் மாடு முட்டி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே ராப்பூசலில்தான் பலத்த பாதுகாப்புடனும், எதிர்பார்ப்புடனும் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. எல்லா போட்டிகளிலும் வழக்கமாக கடைபிடிக்க வேண்டியதான வாடிவாசல், பார்வையாளர்கள், பிரமுகர்கள் அமர்வதற்கான கேலரி,  இருபுறங்களிலும் பாதுகாப்புக்கான தடுப்புக் கட்டைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டுப் போட்டியை வழக்கம்போலவே சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சிவகங்கை, கரூர், உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 977 காளைகளும், 211 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். மாடுகளை கால்நடை மருத்துவக் குழுவினரும் மாடுபிடி வீரர்களை மருத்துவக் குழுவினரும் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். காலையில் ஆரம்பித்த போட்டி, கொஞ்சமும் சூடு குறையாமல், பிற்பகல் வரை பட்டையைக் கிளப்பியது. பார்வையாளர்களின் ஆரவாரம், மாடுபிடி வீரர்களின் பாய்ச்சல் என களைகட்டியது ராப்பூசல் போட்டி. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என  21 பேர் காயமடைந்தனர். 

 ஜல்லிக்கட்டு

அதேபோல,பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை ஒலியநாயகி அம்பாள் கோயிலின்  பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மறவாமதுரை பெரியகண்மாயில் நடைபெற்ற இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் மற்றும் வீரர்கள் உற்சாகமாகப் பிடித்தனர். இந்த மஞ்சு விரட்டில்,  மாடு முட்டியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், பார்வையாளர்கள் 15 பேருக்கு மேல் லேசான காயங்கள் ஏற்பட்டன.