வெளியிடப்பட்ட நேரம்: 01:38 (12/04/2018)

கடைசி தொடர்பு:09:55 (12/04/2018)

`தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி' - கொந்தளிக்கும் அய்யாக்கண்ணு!

காவிரிக்காக பா.ம.க சார்பில் நடைபெற்ற கடையடைப்பில், அய்யாக்கண்ணு கலந்துகொண்டார். 

அய்யாக்கண்ணு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, போராட்டங்கள், கடையடைப்பு என தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பா.ம.க சார்பில் நடந்த கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து, போராட்டத்தில் கலந்துகொண்டு, கடுமையாக மத்திய அரசை விமர்சனம் செய்தார் அய்யாக்கண்ணு. 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு,  ”காவிரிக்கான போராட்டம் அறவழிப் போராட்டமாக நடைபெற்றுவருகிறது. ஆனால், வன்முறையைத் தூண்டும் வகையில் போராட்டம் நடைபெறுவதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை கூறுவது கண்டிக்கத்தக்கது. இது சர்வாதிகார நாட்டில் வாழ்கிறோமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க-வினரால் செய்தியாளர்கள் மிரட்டப்படுகின்றனர். இந்தியாவில், விவசாயிகள் நாலாந்தர குடிமக்களாகக் கருதப்படுகின்றனர். விவசாயிகளுக்கு 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு மகசூல் என்ற மத்திய அரசு கூறுவது ஏமாற்றும் வேலை. இந்திய ஜனநாயக நாட்டில், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், காலில் போட்டு மிதித்திருக்கிறது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றம் 6 வார கால அவகாசம் கொடுத்தும், அந்தக் காலத்தை விரயம் செய்துவிட்டு, ஸ்கீம் என்றால் என்ன என்று அதற்கு அர்த்தம் கேட்டு வழக்குத் தொடர்ந்திருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ், மீத்தேன் திட்டங்களைக் கொண்டுவந்து, வட இந்திய நிறுவனங்கள் கோடிகோடியாகச் சம்பாதிக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. விவசாயம் பொய்த்துப்போனால், விவசாயி வாழ வழியில்லாமல் ஊரைவிட்டு ஓடும் சூழல் வரும் என நினைக்கும் மத்திய அரசு, தமிழகத்தை பாலைவனம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. முழுக்கமுழுக்க விவசாயிகளையும், தமிழ் நாட்டையும் அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறது. இதை ஒருபோதும் விடமாட்டோம்” என்றார்.