வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (12/04/2018)

கடைசி தொடர்பு:08:09 (12/04/2018)

`போராட்டம் செய்தால் மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்காது' - போலீஸ் கமிஷனரின் அடடே விளக்கம்!

'காவிரிக்காகப் போராட்டம் செய்தால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்; அரசு வேலை கிடைக்காது' என திருச்சி  போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். 
அமல்ராஜ்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள சாலையில், இரவு 8 மணியளவில் மாணவர்கள் திடீரெனக் கூடி காவிரிக்காக மத்திய மாநில அரசுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பியதுடன், போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு விரைந்துவந்த டி.சி. சக்திகணேஷ் தலைமையிலான போலீஸார், போராட்டக்காரர்களைச் சுற்றி வளைத்துக் கைதுசெய்தனர். அதன்பிறகும் மாணவர்கள் வருகை அதிகமாகிக்கொண்டே இருக்க, போராட்டக்காரர்களைக் கலைக்க நினைத்த போலீஸார், தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
 
சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி  வைரலானதால், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள், பெண்கள் ஏற்கெனவே ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த அப்பகுதிக்கு வந்தவண்ணம் இருந்தனர். இதனால் செய்வதறியாமல் தவித்த போலீஸார், 100-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டனர். இந்தப் போராட்டத்தால், பரபரப்பு நிலவியது. மேலும், கைதுசெய்யப்பட்டவர்களை அரசுப் பேருந்தில் போலீஸார் ஏற்றிச் சென்றபோது, ஆத்திரமடைந்த மாணவர்கள், பேருந்தை உடைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார், கையில் கிடைத்தவர்களை எல்லாம் வெளுத்து வாங்கினர். இதேநேரம், திருச்சி அரசு மருத்துவமனை அருகே கர்நாடகா பேருந்து ஒன்று தாக்குதலுக்குள்ளானது. இதையடுத்து போலீஸார், போராட்டக்காரர்கள்மீது தடியடி நடத்தினர். அதில், சாலையில் நடந்துபோன அப்பாவிகள் தாக்குதலுக்குள்ளானார்கள். தாக்குதலில் காயமடைந்தவர்களையும் கைதுசெய்த போலீஸார், திருச்சியில் பல திருமண மண்டபங்களில் அடைத்துவைத்துள்ளனர். காயங்களுடன் ரத்தம் சொட்டச் சொட்ட இருக்கும் மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல், விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
மாணவர்கள்
இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனை முன்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், "காவிரிக்காகப் போராட்டம் நடத்த சில மாணவர்கள் திடீரெனக் கூடியதால், பரபரப்பு நிலவியது. சில இடங்களில் பேருந்துகள்மீது தாக்குதல் நடந்ததால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் போராட்டம் செய்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்; அரசு வேலை கிடைக்காது" என்றார். அவரிடம், மாணவர்கள்மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது சரியா என்கிற கேள்வியை முன்வைத்தபோது அவர், பேட்டியை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். 
 
போராட வந்த மாணவர்கள், போலீஸ் நடத்திய தடியடியிலிருந்து தப்பிக்க ஓடியவர்களின் பைக், போராட்டம் நடத்திய பகுதிகளில் நிறுத்தப்படுள்ளன. அவற்றைக் கைப்பற்றிய போலீஸார், வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க