வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (12/04/2018)

கடைசி தொடர்பு:07:29 (12/04/2018)

கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு எதிரான தி.மு.க எம்.எல்.ஏ வழக்கு ஒத்திவைப்பு..!

கூட்டுறவுச் சங்கத் தேர்தல் தொடர்பாக தி.மு.க எம்.எல்.ஏ சக்கரபாணி தொடர்ந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கத் தேர்தல் தொடர்பாக தி.மு.க எம்.எல்.ஏ சக்கரபாணி தொடர்ந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சக்கரபாணி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் ``தமிழகத்திலுள்ள 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கான பல கட்டத் தேர்தல் குறித்த அறிவிப்பு மார்ச் 5-ம் தேதி தேர்தல் ஆணையரால் வெளியிடப்பட்டது. எனக்குக் கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் கூட்டுறவுத் தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை. இந்தத் தேர்தலுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் மாநிலப் பொறுப்பாளர்களாகவும், அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மாவட்டப் பொறுப்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவர்கள் தங்களது அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியினரை மட்டுமே தேர்வு செய்துள்ளனர். 

எதிர்க்கட்சியினரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பலரது மனுக்களையும் தள்ளுபடி செய்து அ.தி.மு.க-வினரை மட்டும் தேர்வு செய்துள்ளனர். இப்படி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. எனவே, கூட்டுறவு தேர்தல் தொடர்பாக கடந்த மார்ச் 5-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பும், அதன்படி நடந்த தேர்தல்களும் சட்டவிரோதம் என்பதால், செல்லாது என அறிவித்து, சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்'' என் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு இன்று நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தபோது பல கட்ட விசாரணை முடிந்த பின் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.