வெளியிடப்பட்ட நேரம்: 05:33 (12/04/2018)

கடைசி தொடர்பு:06:50 (12/04/2018)

சிவகாசியில் சட்ட விரோத பட்டாசு ஆலைகளுக்கு சீல் - மாவட்ட நிர்வாகம் அதிரடி!

விருதுநகர் மாவட்டத்தில்  சட்ட விரோதமாக இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலைக்குச் சீல் வைத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் சமீப காலங்களாக விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.

பட்டாசு தொழிற்சாலை

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலைகளில் விதிமுறை மீறல்களைக் கண்காணிக்க ஆய்வுப் பணியை மேற்கொண்டனர். இதனடிப்படையில், நேற்று வெம்பக்கோட்டை வட்டாட்சியர் பட்டாசு தொழிற்சாலைகளை திடீர் ஆய்வு  மேற்கொண்டபோது, செவல்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த சரவணா பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் முருகேசன்  இறந்துவிட்ட நிலையில், சிவகாசியைச் சேர்ந்த நடராஜ் என்பவர் அந்தப் பட்டாசு ஆலையைக் குத்தகைக்கு எடுத்து,  உரிமம் பெறப்படாத 6 அறைகளில் தகரக் கொட்டகைகள் அமைத்து சட்ட விரோதமாகப் பட்டாசு உற்பத்தி செய்து வந்ததைக் கண்டுபிடித்தார்.

உடனடியாக, பட்டாசு உற்பத்தி செய்து வந்த 6 அறைகள் மற்றும் கொட்டகைகளை பூட்டி சீல் வைத்தும், தயார் செய்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை கைப்பற்றியும், திறந்தவெளியில் காய வைக்கப்பட்டிருந்த திரிகளையும் தண்ணீர் ஊற்றி அழிக்கப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு சட்டவிரோதமாக குத்தகை அடிப்படையில் பட்டாசுகள் உற்பத்தி செய்து வந்த குத்தகைதாரர் கணேசன், கார்த்திக் ஆகியோர்  மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும், தொழிற்சாலையின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கும் மாவட்ட ஆட்சியருக்கு வெம்பக்கோட்டை வட்டாட்சியர் பரிந்துரை செய்துள்ளார். இதற்கிடையே விருதுநகர் மாவட்டத்தில் உரிமம் பெறாத பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை தொடரும் என்று  அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க