அனில் அகர்வாலுக்கு எதிராக கொந்தளித்த சில்வர்புரம் கிராம மக்கள்..!

ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் மற்றும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் உருவபொம்மையைப் பாடையில் தூக்கி வந்து ஒப்பாரி வைத்து  ஊர்மக்கள் செருப்பால் அடிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர்  மற்றும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் உருவபொம்மையைப் பாடையில் தூக்கி வந்து ஒப்பாரி வைத்து ஊர்மக்கள் செருப்பால் அடிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம்

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது, தற்போது செயல்பட்டு வரும் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என வலியுறுத்தி, ஆலையின் அருகில் உள்ள அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 60 நாள்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சியினர், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கிராம மக்களைச் சந்தித்து ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த கிராமத்தைத் தொடர்ந்து பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மடத்தூர், தெற்குவீரபாண்டியாபுரம், சுப்பிரமணியபுரம், சில்வர்புரம் உள்ளிட்ட 8 கிராம மக்கள் ஆலைக்கு எதிராகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே, சில்வர்புரம் கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர்  மற்றும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் உருவ பொம்மையைப் பாடையில் ஏற்றி, ஊர் எல்லையில் இருந்து டிரம்ஸ் அடிக்கப்பட்டு ஊர்வலமாக போராட்டம் நடந்து வரும் இடத்துக்குக் கொண்டு வந்தனர். ஊர்வலத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், அனில் அகர்வாலுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், பாடையைச் சுற்றி பெண்கள் அமர்ந்துகொண்டு, ஒப்பாரிப் பாடல் பாடினார்கள். 

போராட்டம்

இதுகுறித்து ஊர் மக்களிடம் பேசினோம், ”நிலம், நீர், காற்று ஆகியவற்றைக் கடந்த 23 வருடமாக மாசுபடுத்தியது போதும். இனியும் இந்த ஆட்கொல்லி  ஆலை தூத்துக்குடியில் இயங்கக் கூடாது. நச்சுப்புகை கலந்த காற்றைச் சுவாசித்து வருகிறோம். இதனால் எவ்வளவு பெரிய பாதிப்பை அனுபவித்து வருகிறோம் என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். இந்த ஆலைக்கு ஒட்டுமொத்த மக்களின் கடுமையான எதிர்ப்புதான் இந்தப் பாடை கட்டும் போராட்டம். இந்த ஆலை மூடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆலைக்கு மூடுவிழா நடத்தப்படும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்” என்றனர் கொந்தளிப்புடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!