வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (12/04/2018)

கடைசி தொடர்பு:10:36 (12/04/2018)

`தண்ணீர் கொடு தேசமே' - காவிரிக்காகக் களம் இறங்கிய ஆசிரியர் சங்கம்!

காவிரி நதிநீர்  மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் இந்திய வரைபடத்திடம், தமிழ்நாடு வரைபடம் மனு அளிப்பது போன்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்துக்கு ஆதரவாகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் போராட்டங்கள்  மிகத் தீவிரநிலையை அடைந்திருக்கின்றன. அந்தவகையில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின்  மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம் நேற்று (11.4.2018) மாலை நடைபெற்றது. புதுக்கோட்டை நகரில், பி.யூ.சின்னப்பா பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், ஆசிரியர்கள் பிடித்திருந்த பேனர் எல்லாருடைய கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. அதாவது, முழுவதுமாக வறண்ட நிலையில் இருக்கும் தமிழ்நாடு, இந்திய தேசத்திடம் 'தண்ணீர் கொடு தேசமே' என்ற கோரிக்கை மனுவைக் கொடுப்பதுபோல் சித்திரம் வரையப்பட்டிருந்தது. வந்திருந்த ஆசிரியர்கள் காவிரி நதிநீர் குறித்தும் ஸ்டெர்லைட் ஆலை குறித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் இதுகுறித்துப் பேசுகையில்,  ``காவிரி நீர் நமது உரிமை. அதனை கர்நாடகா அரசிடமிருந்து பெற்றுத்தரவேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும். இதில், கர்நாடகா மாநிலத்தின் தேர்தல் வெற்றியை மனதில் வைத்துச் செயல்படுவது, ஒரு கண்ணில் சுண்ணாம்பும், மற்றொரு கண்ணில் பாலையும் வைப்பதற்குச் சமம். தமிழகத்தின் நலன்கருதி  காவிரி நதிநீர்  மேலாண்மை வாரியத்தைக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமைக்க வேண்டும்.

அதுபோல், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழகத்தில் தொடர்ச்சியாக இயங்க அனுமதிக்கக்கூடாது. தமிழர்கள் இந்தியாவில் இருக்கும் குடிமக்களா? அல்லது, அகதிகளா?. மத்திய அரசு  எப்படி இந்தியா முழுமைக்கும் ஒரே வரியை அறிமுகம் செய்ததோ, அதைப்போல இந்தியா முழுவதும் சமத்துவமான நீர் பகிர்மான கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்றார்.