வெளியிடப்பட்ட நேரம்: 08:34 (12/04/2018)

கடைசி தொடர்பு:10:28 (12/04/2018)

பிரதமர் வருகைக்கு எதிராகக் கருணாநிதி உள்ளிட்டவர்களின் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றம்..!

தமிழகத்துக்கு இன்று வருகைதரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க தலைவர் கருணாநிதி வீடு, அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒருபகுதியாக, இன்று தமிழகம் வருகைதரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்ட உள்ளதாக தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் அறிவித்திருந்தன. இந்த நிலையில், இன்று காலை 9.20 மணி அளவில் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் வந்து இறங்க உள்ளார்.

பிரதமர் மோடியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் வரவேற்க உள்ளனர். அதையொட்டி சென்னை விமான நிலையத்தைச் சுற்றிய பகுதிகள், காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், அவர் செல்லும் பாதை  எங்கும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதி வீடு, அண்ணா அறிவாலயம், மு.க.ஸ்டாலின் வீடு, வைகோ உள்ளிட்டவர்களின் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளிலும் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.