வெளியிடப்பட்ட நேரம்: 09:16 (12/04/2018)

கடைசி தொடர்பு:09:16 (12/04/2018)

காவிரிப் போராட்டத்தில் வன்முறை... - சேப்பாக்கத்தில் நடந்தது என்ன?

காவிரிப் போராட்டத்தில் வன்முறை... - சேப்பாக்கத்தில் நடந்தது என்ன?

காவிரி விவகாரத்தில், தமிழகத்தின் போராட்டக் கொதிநிலையை உலகக் கவனத்துக்கு எடுத்துச்சென்றிருக்கிறது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டம்! அதேசமயம், போராட்டக் குழுவை கலைக்கும் முயற்சியில் காவல்துறை தடியடி நடத்தியதும், பதில் தாக்குதலாக போராட்டக் குழுவில் உள்ள சிலர் காவலர்களைத் தாக்குவதாக வெளியாகியிருக்கும் வீடியோக்களும் அறவழிப் போராட்டத்தின் மீதான கண்ணியத்தை களங்கப்படுத்தியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், காலம் கடத்திவருகிறது மத்திய பி.ஜே.பி அரசு. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துவரும் இந்தச் சூழ்நிலையிலும், மத்திய - மாநில அரசுகள் காவிரி விவகாரத்தில் தொடர்ந்து அரசியல் செய்துவருவது பொதுமக்களிடையே கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாக 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி' இளைஞர்களும் மாணவர்களும் தன்னெழுச்சிப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட்  போட்டியின் ஒருபகுதியாக சென்னை சேப்பாக்கத்தில், தமிழகம் - கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 

காவிரிப் போராட்டம்

'தமிழகமே தங்களது வாழ்வாதாரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், கிரிக்கெட் கொண்டாட்டங்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமையும்; எனவே, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தமிழகத்துக்குள் நடத்தவேண்டாம்' என இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு தமிழக ஆளுங்கட்சி உள்ளிட்ட தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனாலும், 'சென்னையில் திட்டமிட்டபடி ஐ.பி.எல். போட்டி நடைபெறும்' என்று ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிபடத் தெரிவித்தார். 

இதையடுத்தே தமிழகத்தில் பதற்றநிலை பரவ ஆரம்பித்தது. போட்டி நாளான நேற்றை முன்தினம் காலையிலிருந்தே அண்ணாசாலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டனர். காவிரிப் போராட்டக் குழுவினரும் சேப்பாக்கம் ஸ்டேடியம் மற்றும் அண்ணாசாலைப் பகுதிகளில் குவியத் தொடங்கினர். தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த இயக்குநர் பாரதிராஜா, சீமான், வ.கவுதமன், வெற்றி மாறன், மு.களஞ்சியம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட வி.ஐ.பி-க்களும் தங்களது உணர்வுகளை எடுத்துரைக்கும் விதமாகப் போராட்டக் களத்தில் பங்கெடுத்துக்கொண்டனர். தமிமூன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் தங்களது ஆதரவாளர்களோடு போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டனர்.

நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய அரசியல் கட்சியினரும் பெருமளவில் போராட்டத்தில் பங்கேற்றதால், போராட்டக்  களம் பரபரப்புக்குள்ளானது. போட்டியைக் காணவரும் ரசிகர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டன. ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களை அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களிலிருந்து சேப்பாக்கம் மைதானத்துக்குள் பாதுகாப்பாக அழைத்துவரும் முயற்சியில் காவல்துறையினர் கடும் சிரத்தையுடன் ஈடுபட்டனர். ஆனால், போட்டி தொடங்கும் நேரம் நெருங்க நெருங்க.... போராட்டக் களத்தில் பரபரப்பு அதிகரித்தது.

சென்னை சேப்பாக்கம்

இதையடுத்து போராட்டக்காரர்கள், சேப்பாக்கம் ஸ்டேடியத்தை நோக்கிச் செல்லும் முயற்சியை தடுக்கும் முன் எச்சரிக்கையோடு போலீஸார் தடியடி நடத்தத் தொடங்கினர். இதையடுத்து போராட்டக் குழுவினர் சிதறி ஓடினர். சில இடங்களில், போலீஸாரின் தாக்குதலுக்கு எதிர்வினையாக போராட்டக் குழுவினரும் காவல்துறையினரோடு கைகலப்பில் ஈடுபட்டனர்.

இந்தப் பதற்றங்களுக்கிடையே, இரவு 8 மணியளவில் ஐ.பி.எல். போட்டியும் தொடங்கியது. மைதானத்துக்குள் போராட்டக்காரர்கள் யாரேனும் நுழைந்துவிடக் கூடாது என்ற போலீஸாரின் தீவிரக் கண்காணிப்பையும் கடந்து உள்ளே நுழைந்த சிலர், போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தங்களது கட்சிக் கொடிகளை அசைத்தவாறே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கோஷங்களை எழுப்பினர். இன்னும் சிலர் தாங்கள் அணிந்திருந்த காலணிகளை கழற்றி மைதானத்துக்குள் வீசியெறிந்தனர்.  பார்வையாளர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலர்கள் போராட்டக்காரர்களின் இந்த எதிர்பாராத யுக்திகளால் திணறிப்போயினர். உடனடியாக சுதாரித்து போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய காவல்துறை அவர்களைக் கைது செய்து அழைத்துச்சென்றது. 

சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு வெளியே நடைபெற்ற போராட்டக் காட்சிகளை எல்லாம், வட இந்திய செய்தி சேனல்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பிவந்தன. இந்நிலையில், கிரிக்கெட் மைதானத்துக்குள் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே பார்வையாளர்கள் பகுதியிலிருந்த போராட்டக்காரர்கள் திடீரென எழுந்துநின்று கொடிகளை ஆட்டியபடி  கோஷங்கள் எழுப்பியக் காட்சிகள் ஒட்டுமொத்த மீடியாவின் கவனத்தையும் ஈர்த்தன. 

ரஜினிகாந்த் ட்வீட்

''ஐ.பி.எல் போட்டியை நிறுத்தக்கோரி போராட்டம் நடத்துவதால், காவிரி நீர் கிடைத்துவிடுமா?'' என்று போராட்டக்காரர்களுக்கு எதிராக வாதங்கள் வைக்கப்பட்டுவந்தன. இதற்குப் பதிலளித்துப் பேசிய போராட்டக்காரர்கள், ''நாங்கள் இங்கே போராடுவதால், காவிரி நீர் வந்துவிடும் என்பதல்ல விஷயம்... நியாயமான எங்களது கோரிக்கையை உலகம் முழுக்க எடுத்துச் செல்லும் முயற்சியாகவே இந்தப் போராட்டத்தை நாங்கள் இன்றைய தினம் நடத்திவருகிறோம். எங்களது எண்ணப்படியே எங்களது போராட்டக்குரலும் உலக அளவில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது'' என்கின்றனர்.

இதற்கிடையில், 'சீருடையில் இருந்த காவலர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது நாட்டுக்கே பேராபத்து' என்று ட்விட்டர் வழியே அபாயச் சங்கு ஊதியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் அவரது கருத்தை வரவேற்றிருக்கிறார். இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, ''காவலர்கள் மீதான தாக்குதல் எதிர்வினையே'' என்று பதிலளித்திருக்கிறார். கிரிக்கெட் போட்டியைப் பார்க்கவந்த ரசிகர்களைத் தாக்கியதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வந்த போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்டதும் போராட்டத்தின் நோக்கத்தையே மாற்றிவிட்டது! 


டிரெண்டிங் @ விகடன்