பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்திறங்கிய மோடி..! #WeWantCMB #LiveUpdate

திருவடந்தையில் நடைபெற்ற ராணுவக் கண்காட்சியில் பார்வையிட்ட பின், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வருகைதந்தார். அதற்காக, ஐ.ஐ.டியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டில் வந்திறங்கினார். ஐ.ஐ.டி வந்த மோடிக்கு, மாணவர்கள் கறுப்பு கொடி எதிர்ப்பு தெரிவித்தனர். 

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் வீட்டு மாடியில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராட்சத பலூன் தொங்க விடப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகைக்கு அருகில், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கறுப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ராணுவ தளவாட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, திருவிடந்தை சென்றார். 

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார்.

மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில், அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. 

அவருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர்  உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

பிரதமர் மோடி, 10 மணிக்கு முன்னதாக விமானநிலையம் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விமானநிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கைது.

இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன்,ராம் உள்ளிட்டவர்கள் விமானநிலைய வளாகத்துக்கு முன் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம், காவல்துறை அதிகாரிகள் சமாதனம் பேசிவருகின்றனர். 

காஞ்சிபுரம், திருவிடைந்தைப் பகுதியில் நடைபெற்றுவரும் ராணுவக் கண்காட்சியில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகையையொட்டி, சென்னை முழுவதும் சுமார் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 'பிரதமர் வருகையின்போது, கறுப்புக்கொடி காட்டப்படும்' என்று தி.மு.க, நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தனர்.

மோடி, 9.30 மணி அளவில் விமான நிலையம் வரவுள்ள நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பரங்கிமலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர், விமானம் நிலையம் அருகிலுள்ள உயரமான பேனர் தட்டியின்மீது ஏறி கறுப்புக்கொடி காட்டிவருகின்றனர். அதனால், விமான நிலையம் அருகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!